/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வனப்பகுதி செயற்கை குட்டைகளில் நீர்நிரப்பி வரும் வனத்துறையினர்
/
வனப்பகுதி செயற்கை குட்டைகளில் நீர்நிரப்பி வரும் வனத்துறையினர்
வனப்பகுதி செயற்கை குட்டைகளில் நீர்நிரப்பி வரும் வனத்துறையினர்
வனப்பகுதி செயற்கை குட்டைகளில் நீர்நிரப்பி வரும் வனத்துறையினர்
ADDED : பிப் 05, 2024 11:05 AM
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், கடும் வறட்சி நிலவி வருவதால், செயற்கை குட்டைகளில் வனத்துறையினர் நீர் நிரப்பி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், 1.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, யானை, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பூனை, மயில், கரடி, கடமான், மான், சாம்பல் நிற அணில், எகிப்திய கழுகு, புலி உட்பட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அரியவகை மரங்கள் அதிகளவில் உள்ளன; கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் அதிகளவில் முகாமிட்டுள்ளன. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால், உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, மயில், மான் போன்ற வன விலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன. இதனால் மனித - விலங்கு மோதல் ஏற்படுகிறது. மேலும், விவசாய பயிர்கள் சேதமாகின்றன.
கடந்தாண்டு ஓரளவிற்கு வனப்பகுதியிலுள்ள நீர்நிலைகளில் நீர் இருப்பு இருந்தது. ஆனால் நடப்பாண்டு ஏற்பட்டுள்ள வறட்சியால் வனப்பகுதியிலுள்ள இயற்கை குட்டைகளில் நீர் இருப்பு குறைந்து விட்டது. இதனால், வன விலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் நோக்கி வருகின்றன. குறிப்பாக அவ்வப்போது, மான், யானை போன்ற விலங்குகள் வெளியேறி வருகின்றன. இதை தடுக்கும் வகையில், ஓசூர் வனச்சரகம், சானமாவு, போடூர்பள்ளம், செட்டிப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதியில், வனத்துறையினர் அமைத்துள்ள செயற்கை குட்டைகளில் டிராக்டர் மூலம், நீர் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை வனச்சரகங்களிலும், செயற்கை குட்டைகளில் நீர் நிரப்ப, வனத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

