/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் பிரமாண்ட செட்டுகளில் சிலை பிரதிஷ்டை
/
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் பிரமாண்ட செட்டுகளில் சிலை பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் பிரமாண்ட செட்டுகளில் சிலை பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் பிரமாண்ட செட்டுகளில் சிலை பிரதிஷ்டை
ADDED : ஆக 28, 2025 01:05 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹிந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில், நகரின் முக்கிய இடங்களில் மொத்தம், 1,350க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஓசூரில், திரைப்பட கலைஞர்கள் மூலம் தத்ரூபமாக அமைத்த பிரமாண்ட செட்டுகளில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
குறிப்பாக, ஓசூரிலுள்ள சீனிவாசா தியேட்டர் அருகே, எம்.என்.நற்பணி மன்றம் சார்பில், ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் போல் செட் அமைத்து, அதற்குள், ஒருபுறம் ஜெகந்நாதர், ஒருபுறம் அவரது சகோதரி சுபத்ராதேவி, மற்றொரு புறம் சகோதரர் பலராமர் இருப்பது போன்றும், அதற்கு கீழே ஜெகந்நாதர் தோற்றத்தில் விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஓசூரில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம், இந்து ஜனசேனா சார்பில், கயிலாய மலை போல் செட் அமைத்து, அதற்குள் கண் சிமிட்டும் பாலாபூர் விநாயகர் சிலையும், வெளியே, சிவன் ருத்ர தாண்டவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர் தேர்ப்பேட்டையில், ஆதிமலை சிவன் போன்ற வடிவில் செட் அமைத்து விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஓசூர் ஜெனப்பர் தெருவில், ஜே.சி.சி., குழுவினர் அமைத்துள்ள செட்டில், ஆஞ்சநேயர் இதயத்தின் உள்ளே சென்று, ஜோதி லிங்கங்களை தரிசனம் செய்து, அதற்குள் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் பால விநாயகர் மற்றும் முருகனை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் செட் அமைக்கப்பட்டுள்ளது.
பாகலுார் சாலை ஸ்ரீநகரில், அப்பகுதி இளைஞர்கள், பார்லிமென்ட் போன்ற செட் அமைத்து, அதற்குள், மிகப்
பெரிய அளவில் சபாநாயகர் விநாயகர் சிலை, அதன் அருகே பிரதமர் விநாயகர் சிலை மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் பல விநாயகர் சிலைகள் வைத்துள்ளது, காண்போரை கவர்ந்துள்ளது. ஓசூர் என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில், வாடிவாசலில் காளையை விநாயகர் அடக்குவது போன்ற செட்டும், பிருந்தாவன் நகரில், கர்நாடகாவிலுள்ள புகழ்பெற்ற முருடேஸ்வரா கோவில் போலும் செட் அமைத்துள்ளனர். தேன்கனிக்கோட்டையில், 'புஷ்பா 2' படத்தின் இறுதி காட்சியில் வருவது போன்ற செட் அமைத்து, அதற்குள் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
ஓசூர் நேதாஜி ரோட்டில், ஸ்ரீராம்சேனா சார்பில், மிகப்பெரிய ராஜகணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஓசூர் பகுதியிலுள்ள விநாயகர் சிலைகளை மக்கள் கண்டு வழிபட்டு வருகின்றனர். வரும், 31ம் தேதி வரை பக்தர்கள் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* கிருஷ்ணகிரி பழையபேட்டை தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகில், கிருஷ்ணகிரி மலையின் பின்னணியில், டி.என்.24 என்ற எழுத்தின் மேல் விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலை வைத்துள்ளனர். வித்யாசமாக அமைத்துள்ள இச்சிலையை அப்பகுதி மக்கள் பார்த்து வணங்கிச் சென்றனர்.
* ஊத்தங்கரையில், பல பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு யாக வேள்வி செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். ஊத்தங்கரை பழைய கடை வீதியிலுள்ள அரசமரத்தின் அருகே, பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்தது.
இதில் டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா, நீதிபதி ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊத்தங்கரை நகர வாணியர் சமுதாய சங்கம், வாணியர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல், எம்.எஸ்.எம்.தோட்டம், காமராஜ் நகர், அண்ணா நகர், நாராயண நகர் பகுதிகளில், விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்தது.

