/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் ரூ.4 லட்சம் பறிப்பு மோசடி கும்பல் வேலுாரில் சுற்றிவளைப்பு
/
ரூ.1 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் ரூ.4 லட்சம் பறிப்பு மோசடி கும்பல் வேலுாரில் சுற்றிவளைப்பு
ரூ.1 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் ரூ.4 லட்சம் பறிப்பு மோசடி கும்பல் வேலுாரில் சுற்றிவளைப்பு
ரூ.1 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் ரூ.4 லட்சம் பறிப்பு மோசடி கும்பல் வேலுாரில் சுற்றிவளைப்பு
ADDED : டிச 16, 2025 04:55 AM
கிருஷ்ணகிரி: ஆந்திர தொழிலதிபரிடம், 1 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி, 4 லட்சம் ரூபாய் பறித்த மோசடி கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்த ஜெகதீஷ், 36, நட்சத்திர ஹோட்டல் நடத்தி வருகிறார்.
திருப்பதியில் ஹோட்டல் துவங்க முடிவெடுத்த அவர், அதற்காக ஹோட்டலில் தினமும் சாப்பிட வரும், வேலுாரை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம், 1 கோடி ரூபாய் கடன் பெற்று தருமாறு கேட்டுள்ளார்.
சீனிவாசன், தனக்கு தெரிந்தவர் மூலம், குறைந்த வட்டிக்கு, 1 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி, ஒருவரை அறிமுகப் படுத்தியுள்ளார்.
டிச., 8ல், வேலுார் ஹோட்டலில் சதீஷ், 50, என்பவரை ஜெகதீஷ் சந்தித்துள்ளார். தன் வீட்டு பத்திரத்தை வைத்து, கடன் பெற்று தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு, '10ம் தேதி கிருஷ்ணகிரி வந்தால், கடன் பெறலாம்' என, சதீஷ் கூறியுள்ளார். அதன்படி, 10ம் தேதி ஜெகதீஷ் கிருஷ்ணகிரி வந்தார்.
சதீஷ் மற்றும் இருவர் காரில் வந்தனர். அவர்கள், ஜெகதீஷிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி பார்த்துவிட்டு, அவரை உடன் அழைத்துச் சென்றனர்.
மேலும், தங்களுக்கும், இரண்டு இடங்களில், 1-0 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டி இருப்பதாக கூறி, கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த பையை காட்டினர். அப்போது, 1 கோடி ரூபாய் கடன் பெற, நடைமுறை செலவுகளுக்காக, 4 லட்சம் ரூபாயை ஜெகதீஷிடம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, அவரது காரில் ஏறி, குப்பம் ரோடு, எம்.டி.வி., நகர் அருகே சென்ற போது, அவர்களை, 'மாருதி ஸ்விப்ட்' காரில் பின் தொடர்ந்து வந்த நால்வர் மறித்தனர்.
தங்களை குற்றப்பிரிவு போலீஸ் என அறிமுகப் படுத்தினர்.
ஜெகதீஷிடம், சதீஷ் தரப்பினர், 'காரில் பல கோடி ரூபாய் பணம் உள்ளது. போலீசிடம் நாங்கள் பேசிக் கொள்கிறோம்' எனக்கூறி, ஜெகதீஷை காரை விட்டு இறக்கி விட்டு, போலீஸ் என கூறியவர்களின் காரில் ஏறி, சதீஷ் தரப்பினர் தப்பினர்.
ஜெகதீஷை ஏற்றி வந்த காரும் வேகமாக சென்றது. நடுரோட்டில் நின்ற ஜெகதீஷ், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, மகாராஜகடை போலீசில் புகாரளித்தார்.
போலீசார் விசாரித்ததில், வேலுார் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டதும், வேலுாரில் பதுங்கி இருப்பதும் தெரிந்தது.
அங்கு சென்ற போலீசார், நேற்று முன்தினம், மோசடியில் ஈடுபட்ட வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் சதீஷ், 50, ஓட்டேரி நரேஷ்குமார், 40, உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.

