/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எரிவாயு குழாயில் காஸ் கசிந்து தீ
/
எரிவாயு குழாயில் காஸ் கசிந்து தீ
ADDED : மே 31, 2025 01:40 AM

ஓசூர் : கேரள மாநிலம், கூட்டநாட்டில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக, கர்நாடகா மாநிலம், சிங்கசந்திரா வரை, 334 கி.மீ., துாரம் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
கர்நாடகா மாநிலம், சிங்கசந்திராவில் இருந்து ஓசூர் வரை எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு, சிப்காட்டில் உள்ள கார்போரண்டம் என்ற தனியார் தொழிற்சாலைக்கு 2021 ஏப்ரல் முதல், பைப்லைன் வழியாக காஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்திற்காக, ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை எதிரே, மின்வாரிய அலுவலகத்தை ஒட்டியுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலையோரம், 2 மீட்டர் ஆழத்தில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இதில், நேற்று மாலை, 6:00 மணிக்கு காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய துவங்கியது. ஓசூர் தீயணைப்பு வீரர்கள், மண்ணை கொட்டி கட்டுப்படுத்த முயன்றும் தீ அணையவில்லை. கெயில் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காஸ் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதன் பின் தீ மெல்ல குறைந்து, நேற்றிரவு, 8:00 மணிக்கு மேல் கட்டுக்குள் வந்தது. அதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
கெயில் அதிகாரிகள், சேதமான பைப் லைனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டு மீட்டர் ஆழத்தில் உள்ள பைப்லைன் அவ்வளவு எளிதாக சேதமாக வாய்ப்பில்லை. நாசவேலை காரணமா என விசாரிக்க, சிப்காட் போலீசில் புகார் செய்ய உள்ளோம்' என்றனர்.