ADDED : மே 02, 2025 01:55 AM
ஓசூர்:ஓசூர் சப்கலெக்டர் அலுவலகத்தில் இன்று (மே 2) காலை, 10:00 மணிக்கு, கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதை விவசாயிகள் அறிய, விவசாய சங்க பிரநிதிகளுக்கு, சப்கலெக்டர் அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். மற்ற விவசாயிகள் அறியும் வகையில், பத்திரிகைகளில் செய்தி வெளியிட அறிக்கை தர வேண்டும். ஆனால் இன்று (மே 2) நடக்கும் கூட்டத்திற்கு, விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் பல விவசாயிகள் கூட்டம் நடப்பதை கூட அறிந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், ''விவசாயிகள் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்யத்தான் குறைதீர் கூட்டம். ஆனால், விவசாயிகளுக்கே தகவல் தெரிவிக்காமல், ஓசூர் சப்கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்துகின்றனர். விவசாயிகள் வந்தால் தான் குறைகளை தெரிவிக்க முடியும். அதிகாரிகளை மட்டும் அழைத்தால் எப்படி விவசாயிகளின் குறைகள் தெரியும்,'' என்றார்.
ஓசூர் சப்கலெக்டர் பிரியங்காவிடம் விளக்கம் கேட்க மொபைல்போனில் தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை.