ADDED : ஜன 20, 2025 06:51 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று காலை, 2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே பனிப்பொழிவால் குளிர்ந்த காற்று வீசிவரும் நிலையில், நேற்று பெய்த சாரல் மழையால் மேலும் குளிர்ந்த காற்று வீசியது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, போச்சம்பள்ளியில், 2 மி.மீ., பாரூரில், 1.40 மி.மீ., மழை பதிவானது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 177 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், மாவட்டத்தில், 2 நாள் பெய்த மழையால், நேற்று, 243 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 177 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 51.85 அடியாக நீர்மட்டம் இருந்தது.
* ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஓசூர் பகுதியில் ஏற்கனவே குளிரின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், நேற்று மழையும் பெய்ததால், மக்கள் கடும் குளிரால் சிரமப்பட்டனர். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குளிரின் தாக்கத்தை வழக்கத்தை விட அதிகமாக உணர முடிந்தது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், காய்ச்சல், தலைவலி, இருமல், சளி தொல்லையால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.