/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆலங்கட்டியுடன் கன மழை
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆலங்கட்டியுடன் கன மழை
ADDED : மே 03, 2024 07:31 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று, ஆலங்கட்டியுடன் கூடிய கன மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2 மாதங்களாக கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, அனல் காற்று வீசி வருவதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மழை பெய்தால் மட்டுமே, இந்த வெப்பத்தை தணிக்க முடியும் என்ற நிலையில், விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நேற்று மாலை, 6:00 மணிக்கு, சூளகிரியில் பலத்த மழை பெய்தது. அருகிலுள்ள ஒட்டர்பாளையம், நாகமங்கலம் மற்றும் துப்புகானப்பள்ளி கிராமங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கன மழை பெய்தது. சூளகிரி அடுத்த குண்டுகுறுக்கி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. மரங்களில் இருந்து மாங்காய்கள் உதிர்ந்து விழுந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதேபோல், காவேரிப்பட்டணத்தில் அரை மணி நேரம் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், நகரில் பல இடங்களில் ஆலங்கட்டி விழுந்தது. தேர்ப்பட்டியில் சாலையோரம் இருந்த, 2 பனை மரங்கள் வேரோடு சாய்ந்தன. வேப்பனஹள்ளியில் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. கிருஷ்ணகிரி வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பலத்த காற்று மட்டும் வீசியது. மழை பெய்யாததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பல மாதங்களுக்கு பிறகு, ஒரு சில இடங்களில் மழை பெய்து, குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.