/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டிற்கே சென்று பிரசவம் தாய் - சேய் இறப்பு குறைவு
/
வீட்டிற்கே சென்று பிரசவம் தாய் - சேய் இறப்பு குறைவு
வீட்டிற்கே சென்று பிரசவம் தாய் - சேய் இறப்பு குறைவு
வீட்டிற்கே சென்று பிரசவம் தாய் - சேய் இறப்பு குறைவு
ADDED : பிப் 01, 2025 02:02 AM
ஓசூர்:யானைகள் நடமாட்டம் உள்ள மலை கிராமங்களில், வீடுகளுக்கே சென்று பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதால், தாய் - சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மலை கிராமங்கள் அதிகமுள்ள கெலமங்கலம் ஒன்றியத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வரை செவிலியர், டாக்டர்களுக்கு தெரிவிக்காமல் வீடுகளில் பிரசவம் பார்த்ததால், தாய் - சேய் இறப்பு அதிகமானது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்வரை சராசரியாக ஆண்டுதோறும், மூன்று பேர் வரை வீடுகளில் பிரசவித்தபோது உயிரிழந்துள்ளனர். கெலமங்கலம் வட்டாரத்தில், 2019ல், 29 பேர் வீடுகளில் குழந்தை பெற்றுள்ளனர். 2020ல், 13 பேர், 2021ல், ஏழு பேர், 2022ல் ஒருவர், 2023ல் இருவர், 2024ல் ஒருவர் என, ஆறு ஆண்டுகளில், 53 பேர் வீடுகளில் குழந்தை பெற்றுள்ளனர்.
மலை கிராமங்களை அதிகம் கொண்ட உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குள் தான் அதிகளவில் வீட்டு பிரசவங்கள் நடந்தன. கெலமங்கலம் வட்டார மருத்துவக் குழுவினர் மலை கிராமங்களுக்கு நேரில் சென்று, வீடுகளில் பிரசவிப்பதால் ஏற்படும் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன் பயனாக வீடுகளில் பிரசவம் நடப்பது தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. ஆனால், தொளுவபெட்டா, பழையூர், கொடகரை, பெட்டமுகிலாளம், கோட்டையூர் கொல்லை, குல்லட்டி, கடமகுட்டை போன்ற பல்வேறு மலை கிராமங்களில், யானைகள் நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் பிரசவ வலி ஏற்பட்டால், மருத்துவமனைக்கு கர்ப்பிணியை அழைத்துச் செல்வது சிரமம்.
அதனால், வீடுகளில் பிரசவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு மற்றும் இதர பிரச்னை காரணமாக, தாய் - சேய் உயிரிழக்க வாய்ப்புள்ளது. அதை தடுக்கும் வகையில், கெலமங்கலம் வட்டார மருத்துவ குழுவினர் வீட்டிற்கே சென்று பிரசவம் பார்க்கின்றனர்.
ஐந்தாண்டுகளில், 15 பிரசவங்களை மருத்துவ குழுவினர் வீடுகளுக்கே சென்று பார்த்து, தாய் - சேயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளனர். கெலமங்கலம் வட்டாரத்தில் சராசரியாக ஆண்டுக்கு மூவர் பிரசவத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது ஒன்றாக இறப்பு குறைந்துள்ளது.