/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரை தோட்டக்கலை வேளாண் மண்டலமாக்க வேண்டும் : தோட்டக்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேட்டி
/
ஓசூரை தோட்டக்கலை வேளாண் மண்டலமாக்க வேண்டும் : தோட்டக்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேட்டி
ஓசூரை தோட்டக்கலை வேளாண் மண்டலமாக்க வேண்டும் : தோட்டக்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேட்டி
ஓசூரை தோட்டக்கலை வேளாண் மண்டலமாக்க வேண்டும் : தோட்டக்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேட்டி
ADDED : பிப் 14, 2024 11:13 AM
ஓசூர்: ''ஓசூரை தோட்டக்கலை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்,'' என, மாவட்ட தோட்டக்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் கூறினார்.
ஓசூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஓசூர் பகுதியில் கடந்தாண்டு, 3 கோடி கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு, 5 கோடி மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அதில், 40 லட்சம் ரோஜாக்கள் மட்டுமே காதலர் தினத்தையொட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட, 60 சதவீதம் குறைவாகும்.
கென்யாவில் அதிகளவில் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டது தான், ஓசூர் ஏற்றுமதி பாதிப்பிற்கு முக்கிய காரணம். உள்ளூர் சந்தையில் ஒரு ரோஜா, 15 ரூபாய் வரையும், ஏற்றுமதி ரோஜா, 18 ரூபாய்க்கும் வாங்கப்பட்டன. கடந்தாண்டு உள்ளூர் சந்தையில் ஒரு ரோஜா, 23 ரூபாய்க்கும், ஏற்றுமதி தரத்திலான ரோஜா, 28 ரூபாய் வரையும் வாங்கப்பட்டன. இந்த ஆண்டு உற்பத்தி அதிகமாகி விலை குறைந்துள்ளது.
ஓசூரில் கட்டப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச மலர் ஏல மையத்தை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அது பயன்பாட்டிற்கு வந்திருந்தால் ஒரு ரோஜாவிற்கு கூடுதலாக, 5 ரூபாய் கிடைத்திருக்கும். ஓசூரில், புது, புது ரக ரோஜாக்கள் சாகுபடி செய்யப்படவில்லை. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம் பகுதியை, தோட்டக்கலை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஓசூரில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நர்சரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புது, புது ரகங்களை சாகுபடி செய்ய, அரசு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். மலர்கள் ஏற்றுமதிக்கான விமான கட்டணத்தை, 25 சதவீதம் குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தோட்டக்கலை அமைப்பு துணைத்தலைவர் மரியப்பா, செயலாளர் பரத், விவசாயிகள் நாகேஷ், கிருஷ்ணகுமார், ரமேஷ் உடன் இருந்தனர்.

