/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சதுர்த்தி முடிந்து ஒரு வாரமாகியும் கரையாத சிலைகள்
/
சதுர்த்தி முடிந்து ஒரு வாரமாகியும் கரையாத சிலைகள்
ADDED : செப் 06, 2025 12:56 AM
கிருஷ்ணகிரி :சதுர்த்தி முடிந்து ஒரு வாரம் ஆன பின்னரும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், கரையாமல் நீரில் தேங்கி குப்பையாக காட்சியளிக்கிறது.
நாடு முழுவதும் ஆக.,27ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில், சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தவும், சிலை அமைப்பது, கரைப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது. குறிப்பாக நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் களிமண்ணாலும், ரசாயன கலவையில்லாத வண்ண பூச்சுடன் சிலைகள் தயாரிக்க வேண்டும். மேலும், சிலைகளை விசர்ஜனம் செய்ய குறிப்பிட்ட நீர்நிலைகள் ஒதுக்கீடு, விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
பெரும்பாலான சிலைகள் கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை, மாதேப்பட்டி, கும்மனுார் தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்டன. அதில் கடந்த, 31 வரை, 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் கரைக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் எத்தனையோ வழிமுறைகள், கெடுபிடிகளை விதித்தபோதும், அவற்றை பின்பற்றாமல் பலர் வெளி மாநிலங்களில் இருந்து, ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்தியுள்ளனர். அவை அனைத்தும் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து ஒருவாரமாகியும், கரையாத நிலையில் கே.ஆர்.பி., அணை பின்புறம் தேங்கி குப்பையாக காட்சி அளிக்கிறது.
இது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'விலை குறைவாக கிடைப்பதாலும், புதிய டிசைன்கள் போன்ற காரணத்தினாலும் ரசாயனம் கலந்த சிலைகளை பலர் பயன்படுத்துகின்றனர். நடப்பாண்டிலும் பல ரசாயன சிலைகள் தண்ணீரில் கரையாமல் தேங்கி கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.