/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெயில் தாக்கம் அதிகரிப்பு தக்காளி விலை உயர்வு
/
வெயில் தாக்கம் அதிகரிப்பு தக்காளி விலை உயர்வு
ADDED : ஏப் 07, 2024 03:25 AM
பாலக்கோடு: பாலக்கோடு மார்க்கெட்டிற்கு, 2 மாதங்களுக்கு பிறகு, தக்காளி வரத்து குறைவினால், விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி, 35 ரூபாய் வரை, வெளி மார்க்கெட்டில் விற்பனையானது. மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, கம்பைநல்லுார், உள்ளிட்ட பகுதிகளில், 10,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். இதன் மூலம், தினசரி, 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது. உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ, 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது கோடை வெயில் தாக்கம் மாவட்டத்தில், 105 பாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தக்காளி செடிகளில் பூ, பிஞ்சு உதிர்ந்து செடிகள் கருகும் நிலையில் உள்ளதால், மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்ததால், விலை உயர்ந்து, 15 கிலோ எடை கொண்ட தக்காளி கூடை, 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தக்காளி விலை இன்னும் சில வாரங்களில், மேலும் விலை உயரும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

