/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர் வட்டாரத்தில் மா மகசூல் பாதிப்பு; காய்ந்த மரங்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

ADDED : மே 03, 2024 07:31 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் வட்டாரத்தில், மா மகசூல் பாதிப்பால், காய்ந்த மாமரங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 35,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மா விவசாயத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000க்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். கடந்த, 6 மாதங்களாக மழையின்றி, கடும் வெயிலால், மா மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு, மா மரங்கள் காய்ந்து வருகிறது. மா மரங்களை காக்க விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி, டிராக்டர் மூலம் ஊற்றி வருகின்றனர். இந்நிலையில், மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து மகசூல் பாதிப்பு, காய்ந்த மா மரங்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும், அதன் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்திருந்தார்.
அதன்படி, பர்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட போச்சம்பள்ளி, மகாதேவகொல்லஹள்ளி, காட்டாகரம், சந்துார், வெப்பாலம்பட்டி, சிகரலப்பள்ளி, புலிகுண்டா, பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி உட்பட பல்வேறு கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. கே.வி.கே., சிறப்பு விஞ்ஞானி ரமேஷ்பாபு தலைமையில், வட்டார புள்ளியியல் ஆய்வாளர் சாந்தி, தோட்டக்கலைத்துறை அனுசுயா உள்ளிட்டோர், வறட்சியால் பாதித்த மா மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.