/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்: 496 மாணவியர் பயன்
/
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்: 496 மாணவியர் பயன்
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்: 496 மாணவியர் பயன்
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்: 496 மாணவியர் பயன்
ADDED : டிச 31, 2024 07:08 AM
ஓசூர்: தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6 முதல், பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்து, உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை, துாத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ், மதியழகன், மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சரயு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர் கல்வியில் சேர்ந்துள்ள, 361 மாணவியருக்கு, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை மாவட்டத்தில் துவக்கி வைத்து, 361 மாணவியருக்கு வங்கி அட்டைகளை வழங்கினார்.மாவட்ட கலெக்டர் சரயு பேசும் போது, ''மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து, 62 கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி படிக்கும், 9,340 மாணவியருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியருக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால், 38 கல்லுாரிகளில் படிக்கும், 361 மாணவியருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும்,'' என்றார். ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், சப்கலெக்டர் பிரியங்கா, மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாசினி, மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
தர்மபுரியில் 135 மாணவியர்
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, தொடங்கி வைத்து கூறுகையில், ''தர்மபுரி மாவட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 6 முதல், பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்து, உயர் கல்வியில் சேரும், 36 கல்லுாரிகளில் படிக்கும், 135 மாணவியருக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தில் மாதந்தோறும், 1,000 வழங்கப்படும்,'' என, தெரிவித்தார்.
பின்னர், திருவள்ளுவர் சிலை திறந்து, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்ற, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அறிவொளி, வாசுகி, வனசுந்தரி ஆகிய, 3 நபர்களுக்கு, 1.50 லட்சம் மதிப்பில் பரிசு வழங்கினார்.
தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, சி.இ.ஓ., ஜோதிசந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.