/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்
/
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2025 02:15 AM
கிருஷ்ணகிரி, நவ. 19
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 2021ம் ஆண்டு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ - ஜியோ சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், மாதப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தியோடர் ராபின்சன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், 2003 ஏப்., 1க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி, 2010 ஆக., 23க்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
இடைநிலை, முதுகலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், பஞ்., செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறை துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
* இதேபோல் ஓசூர் தாலுகா அலுவலகம், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன், ஜாக்டோ ஜியோ சார்பில், நிர்வாகிகள் முருகேசன், திம்மப்பா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தணிக்கையாளர் நடராஜன் உட்பட பலர் பேசினர்.
எஸ்.ஐ.ஆர்., பணியை புறக்கணித்த ஊழியர்கள்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த, 4 முதல் வரும் டிச.,4 வரை நடக்கிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில் கூடுதல் சுமை வழங்கப்பட்டுள்ளதாகவும், பணி குறித்து எந்த பயிற்சியும் வழங்கப்படவில்லை எனக்கூறி வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பினர், இப்பணிகளில் ஈடுபடாமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கூறுகையில், 'எஸ்.ஐ.ஆர்., பணிகளால் ஏற்படும் பணிச்சுமைகளை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் மொத்தம், 1,115 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று (நேற்று) 947 பேர் பங்கேற்றனர். இப்போராட்டம் தொடரும்,' என்றனர்.

