/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கபினி, கே.ஆர்.எஸ்., நீர் திறப்பு 53,000 கன அடியாக அதிகரிப்பு ஒகேனக்கல் காவிரியில் குளிக்க தடை
/
கபினி, கே.ஆர்.எஸ்., நீர் திறப்பு 53,000 கன அடியாக அதிகரிப்பு ஒகேனக்கல் காவிரியில் குளிக்க தடை
கபினி, கே.ஆர்.எஸ்., நீர் திறப்பு 53,000 கன அடியாக அதிகரிப்பு ஒகேனக்கல் காவிரியில் குளிக்க தடை
கபினி, கே.ஆர்.எஸ்., நீர் திறப்பு 53,000 கன அடியாக அதிகரிப்பு ஒகேனக்கல் காவிரியில் குளிக்க தடை
ADDED : ஜூன் 26, 2025 02:25 AM
மழையால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பால், அதற்கேற்ப இரு அணைகளின் நீர்திறப்பு, 53,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 18,000 கன அடியாக அதிகரித்த நிலையில், காவிரியாற்றில் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடகாவின் கபினி நீர்பிடிப்பு பகுதியான, கேரள மாநிலம் வயநாட்டிலும், கே.ஆர்.எஸ்., அணை நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கன மழை பெய்து வருகிறது.
இதனால் இரு அணைகளின் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று இரவு, 8:00 மணிக்கு, கபினிக்கு வினாடிக்கு, 25,000 கன அடிக்கு மேலும், கே.ஆர்.எஸ்., அணைக்கு, வினாடிக்கு, 30,000 கனஅடிக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்தது. இரு அணைகளின் நீர் இருப்பும், 90 சதவீதத்துக்கு மேல் நிரம்பியது.
அதேநேரம் கபினியில் இருந்து வினாடிக்கு, 25,000 கனஅடி, கே.ஆர்.எஸ்.,ல் இருந்து கால்வாய் பாசனத்துக்கு போக, 28,000 கன அடி உபரி நீர் என, மொத்தம், 53 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை, வினாடிக்கு, 7,815 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, மாலையில், 13,332 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து வினாடிக்கு, 20,000 கனஅடி நீர், பாசனத்துக்கு திறக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 113.37 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று மாலை, 112.71 அடியாக சரிந்தது. இருப்பினும் கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் வரும் என்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குளிக்க தடை
கர்நாடகாவில் நீர் திறப்பு அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரியாற்றில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, மாலை 6:00 மணிக்கு, 18,000 கன அடியானது. நீர்வரத்து மேலும், அதிகரிக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்க நேற்று மாலை, 4:30 மணி முதல், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் தடை விதித்துள்ளார்.
நீர்வரத்து அதிகரிப்பால், அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நமது நிருபர் குழு