/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விதி மீறல் வாகனங்களுக்கு ரூ.5.66 லட்சம் அபராதம்
/
விதி மீறல் வாகனங்களுக்கு ரூ.5.66 லட்சம் அபராதம்
ADDED : செப் 20, 2011 12:55 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து 5 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ், இளங்கோவன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அசோகன், சரவணன், தனபால் ஆகியோர் பல்வேறு இடங்களில் அனைத்து வகை வாகனங்களையும் தணிக்கை செய்தனர். தணிக்கையில் மத்திய மோட்டார் வாகன விதிப்படி வாகனத்தில் பதிவு எண்கள் எழுதப்படாத 87 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் சரிசெய்ய குறிப்பாணை வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட ஏழு நாட்களுக்குள் அதனை சரிசெய்து காண்பிக்காத 5 வாகனங்களின் பதிவு சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஆம்னி பஸ்களில் அவரசரகால வழி மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்படாத மற்றும் வரி செலுத்தப்படாத 5 பிறமாநில வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. வாகனங்களில் அதிக பாரம் மற்றும் அதிக ஆட்கள் ஏற்றியது, தகுதி சான்று புதுப்பிக்கப்படாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்டது போன்ற குற்றங்களுக்காக 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் பதிவு எண்களை மத்திய மோட்டார் வாகன விதியின்படி சரியான முறையில் எழுதும்படி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

