/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டம்: சில வரி செய்திகள்
/
கிருஷ்ணகிரி மாவட்டம்: சில வரி செய்திகள்
ADDED : மார் 04, 2024 10:44 AM
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5.40 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் அரவிந்தன், 26; தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம், 10ல் இவரது மொபைல் போனிற்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில், பகுதிநேர வேலை என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதை நம்பிய அரவிந்தன், அதில் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு, 5.40 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். அதன் பிறகு, அதில் வந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்தன், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் புகார் அளித்தார். அதன்படி, இன்ஸ்பெக்டர் கவிதா விசாரிக்கிறார்.
பஸ்சில் 8 பவுன் நகை திருட்டுகிருஷ்ணகிரி, மார்ச் 4-திருப்பத்துார் மாவட்டம் குரும்பேரியை சேர்ந்தவர் நதியா, 36. போச்சம்பள்ளி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம், 18ல் திருப்பத்துாரில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி பஸ்சில் வந்து கொண்டிருந்தார். மத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே பஸ் வந்த போது, இவரது பையை மர்ம நபர் திருடிச்சென்றார். அதில், 8 பவுன் நகை இருந்தது. நதியா புகார் படி மத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பா.ஜ.,வில் இணையும் விழாஓசூர், மார்ச் 4-ஓசூரிலுள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணையும் விழா நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலையில், வக்கீல் நளினி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர், பா.ஜ., கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். மண்டல தலைவர் ஜிம் ரமேஷ், மாவட்ட செயலாளர்கள் பிரவீன்குமார், ராஜசேகர், மண்டல நிர்வாகி ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் டவுன் பஞ்.,ல் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா, சத்திய சாய்பாபா கோவிலில், கமிட்டி தலைவர் சுதீஷ் தலைமையில் நடந்தது. டவுன் பஞ்., செயல் அலுவலர் சுப்பிரமணி, தலைவர் தேவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து, 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களை பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
மேலும், புதிய ஆடைகள் வழங்கப்பட்டு, மதிய உணவு பரிமாறப்பட்டது. கோவில் கமிட்டி நிர்வாகிகள் லட்சுமிநாராயணன், எல்லப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
இருவேறு விபத்தில் இருவர் பலி
கிருஷ்ணகிரி: பர்கூர் தாலுகா வரட்டனப்பள்ளி மேல்வீதியை சேர்ந்தவர் சசிக்குமார், 43, தேங்காய் வியாபாரி; கடந்த, 1ல் மாலை, 6:45 மணிக்கு, இவர் கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் தொன்னையன் கொட்டாய் பாலம் அருகில் ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். அப்போது பின்னோக்கி வந்த லாரி மோதியதில், சசிக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், மத்துார் அருகே உள்ள செவத்தான் கொட்டாயை சேர்ந்தவர் குப்பன், 69, விவசாயி; இவர் கடந்த, 29 மாலை, 4:00 மணிக்கு, தொகரப்பள்ளி - சந்துார் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குப்பன் இறந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.கணவருக்கு கள்ளத்தொடர்புஇளம் மனைவி தற்கொலைகிருஷ்ணகிரி, மார்ச் 4-போச்சம்பள்ளி தாலுகா கொட்டாவூரை சேர்ந்தவர் குமரன். இவர் மனைவி சந்தியா, 22; இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சந்தியாவின் கணவருக்கு, வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதையறிந்த சந்தியா, கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த சந்தியா கடந்த, 15ல் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி இரண்டரை ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால், பர்கூர் டி.எஸ்.பி., பிரித்திவிராஜ் சவுகான் விசாரணை நடத்தி வருகிறார்.
வேட்டைக்கு நாட்டுத்துப்பாக்கி எடுத்து சென்ற 2 பேர் சிக்கினர்
கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை எஸ்.ஐ., அண்ணாமலை மற்றும் போலீசார், சாமகவுண்டன் வலசு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த, 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்கள் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், அவர்கள் ஊத்தங்கரை தாலுகா ஒபகவலசை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், 34, கொட்டுகாரம்பட்டியை சேர்ந்த வேணுகோபால், 40, என்பதும், வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கி எடுத்து சென்றதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

