/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துப்பு கிடைக்காமல் திணறும் கிருஷ்ணகிரி போலீசார்
/
துப்பு கிடைக்காமல் திணறும் கிருஷ்ணகிரி போலீசார்
ADDED : மே 09, 2025 02:51 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 3 முதியவர்களை கொலை செய்த மர்ம கும்பல், வீட்டிற்கும் தீ வைத்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலுக்கும், ஈரோடு அருகே சிவகிரியில் நடந்த தம்பதி கொலைக்கும் தொடர்பு உள்ளதா என, மாவட்ட எஸ்.பி., தலைமையில் சென்று போலீசார் விசாரித்தனர். ஆனால், எந்த துப்பும் கிடைக்காததால், போலீசார் திணறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் கடந்த மார்ச், 12 ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த லுார்துசாமி, 70, அவரது மனைவியின் தங்கை எலிசபெத், 60, ஆகியோர் கொலை செய்யப்பட்டு, வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.
அதே மாதம், 19 ம் தேதி, சூளகிரி அருகே அட்டகுறுக்கியில், நாகம்மா, 65, என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. இந்த இரு சம்பவத்தையும் ஒரே கும்பல் தான் செய்திருக்க வேண்டும் என, போலீசார் தரப்பில் கூறப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையிலான போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இரு மாதங்கள் ஆன போதும், குற்றவாளிகள் குறித்து எந்த தடயமும் சிக்கவில்லை. சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பலமுறை பார்த்த பின்பும் கூட, போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. போலீசாருக்கு சவால் விடும் அளவிற்கு மர்ம கும்பல் கொலைகளை அரங்கேற்றியுள்ளது.
இந்நிலையில் தான், ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தை சேர்ந்த ராமசாமி, 72, அவரது மனைவி பாக்கியம், 63, ஆகியோர், வீட்டில் தனியாக இருந்த போது கடந்த, 1ம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கொலையும் ஒரே கும்பல் தான் செய்ததா என்பதை அறிந்து கொள்ள, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரே, இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சையத் சுல்தான் பாஷா ஆகியோர் ஈரோடு மாவட்டத்திற்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணைக்கு பின் அக்கொலைக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கொலைக்கும் தொடர்பில்லை என்பது தெரிந்தது.
கடந்த மார்ச் மாதம், திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில், வயதான விவசாய தம்பதி படுகொலை செய்யப்பட்டனர். அங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் கடந்த மாதம் விசாரணை நடத்தினர். இருந்தும் ஓசூர் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கொலை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, அடிக்கடி ஓசூரில் முகாமிட்டு வருகிறார்.
போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரித்தும் கொலை வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், போலீசார் திணறி வருகின்றனர்.