ADDED : ஜூன் 10, 2024 02:37 AM
துலுக்காணி மாரியம்மன்
கோவில் கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி ராசு வீதியிலுள்ள சித்தி விநாயகர், துலுக்காணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 5 ல் துவங்கியது. கடந்த, 7 காலை, 9:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதற்காக யாகம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று
முன்தினம், 2ம் மற்றும் 3ம் கால யாக பூஜை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை, 4ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை, 7:30 மணிக்கு சித்தி விநாயகர் கோவிலுக்கும், 7:40 மணிக்கு, துலுக்காணி மாரியம்மன் கோவிலுக்கும், கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணகிரி பகுதி மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கர்ப்பிணி மாயம்ஓசூர்: ஓசூர், ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் பசுமை நகரை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி திரிஷா, 28. கடந்த, 9 மாதங்களுக்கு முன் திருமணமான இவர் தற்போது, 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முனதினம் காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் காந்தா, 47, புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் திரிஷாவை தேடி வருகின்றனர்.
கல்லுாரி மாணவி கடத்தல்ஓசூர்-
சூளகிரி அடுத்த பி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் மகள் ஜெயப்பிரியா, 19. கிருஷ்ணகிரி தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படிக்கிறார்; நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்த மாணவியை, திருமணம் செய்யும் நோக்கில், சூளகிரி அடுத்த கூலியம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லுாரியில் பி.காம்., மூன்றாமாண்டு படிக்கும் தினேஷ், 20, என்பவர் கடத்தி சென்று விட்டதாக, மாணவியின் அண்ணன் ஜெயேந்திரன், 22, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார்
மாணவியை தேடி வருகின்றனர்.
மரத்தின் மீது மோதல்
பைக்கில் சென்ற விவசாயி பலி
போச்சம்பள்ளி-
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்த, குள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 35, விவசாயி; இவர், நேற்று முன்தினம் இரவு தன் பஜாஜ் பல்சர் பைக்கில் மத்துாரிலிருந்து தன் வீட்டிற்கு திப்பம்பட்டி பிரிவு சாலை அருகே, திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே விழுந்திருந்த புளிய மரம் தெரியாமல் அதன் மீது மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தவறி விழுந்த முதியவர் சாவு
ஓசூர், ஜூன் 10-
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே எக்கூரை சேர்ந்தவர் அழகேசன், 80. கடந்த, 7 மதியம், 4:00 மணிக்கு, தன் வீட்டு குளியலறையில் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கல் மீது தவறி விழுந்து நெற்றியில் காயமடைந்தார். ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து பெண் உயிரிழப்புஓசூர்: சூளகிரி அருகே உஸ்தலப்பள்ளியை சேர்ந்தவர் சின்னன் மனைவி எல்லம்மா, 58, விவசாயி; கடந்த, 7 மாலை, 4:00 மணிக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, விஷப்பாம்பு எல்லம்மாவை கடித்தது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று
முன்தினம் உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு வெடித்து பா.ஜ., கொண்டாட்டம்
ஓசூர்: நாட்டின் பிரதமராக தொடர்ந்து, 3வது முறையாக மோடி நேற்று பதவியேற்று கொண்டார். இதையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சி சார்பில், ஓசூர் காந்தி சிலை அருகே, மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் பிரவீன்குமார், ராஜசேகர், துணைத்தலைவர் முருகன், மாநகர தலைவர்கள் மணிகண்டன், ரமேஷ் கண்ணன், தங்கராஜ், நாகேந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஊத்தங்கரையில் ரவுண்டானாவில், பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு, மத்திய மண்டல தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர், செயலாளர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், மண்டல பார்வையாளர் தனக்கோட்டி, வடக்கு மண்டல தலைவர் சிங்காரவேலன், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமதுரை மற்றும் பாஜ., நிர்வாகிகள் பலர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.