/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாலமுருகன், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
/
பாலமுருகன், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 03, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி, பர்கூரில், ஜெகதேவி சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, திருக்குட நன்னீராட்டு பெருவிழா கடந்த மாதம், 20ல், முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, 30ல், புனிதநீர் எடுத்தல், புற்று மண் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் ஆகியவையும், மாலையில், கும்ப அலங்காரம், முதற்கால யாக வேள்வி, மஹா கணபதி மூல மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தது.
நேற்று முன்தினம், 2ம் கால யாக வேள்வி, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்ச காவ்ய அபிஷேகம், நட்சத்திர கலச ஆராதனை, அபிஷேகம், கோபுர கலச பிரதிஷ்டை, 3ம் கால யாக வேள்வி, மூலமந்திர ஹோமம் ஆகியவை நடந்தது.
நேற்று காலை, 4ம் கால யாகவேள்வி, கடம் புறப்பாடு, காலை, 10:00 மணிக்கு, பாலமுருகன், சிவன், பார்வதி, கணபதி, நவக்கிரகங்கள், இடும்பன், கோபுர விமானங்களுக்கு சமகாலத்தில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கோ பூஜை, வேத பாராயணம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. இதில், கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த பையனப்பள்ளியிலுள்ள மண்டுமாரியம்மன் கோவில் மஹா அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
காலை, 5:00 மணிக்கு, 3ம் கால யாகசாலை பூஜை, கும்ப யாத்திரை, கடம் புறப்பாடு, காலை, 9:30 மணிக்கு, மண்டு மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
* போச்சம்பள்ளி அடுத்த, அரசம்பட்டி, பழனம்பாடி, காந்திபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. பர்கூர், தி.மு.க., -எம்.எல்.ஏ., மதியழகன் கலந்து கொண்டார். அதேபோல், பெரியகரடியூர் கிராமத்தில் திருவேங்கட பெருமாளப்பன் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட
பக்தர்கள் கலந்து கொண்டனர்.