/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2024 12:50 AM
கிருஷ்ணகிரி, டிச. 20-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், களப் பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும் வேண்டும். உதவி இயக்குனர், கூடுதல் இயக்குனரின் பணிகளையும், கடமைகளையும், மண்டல துணை இயக்குனர், இணை இயக்குனர் (நிர்வாகம்), இயக்குனர் ஆகியோர்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். திறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பெரும் பணிச்சுமையை சுமத்துவதையும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கிற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதையும் கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், மாவட்ட செயலாளர் பிரகாஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் கல்யாணசுந்தரம், மகளிரணி துணை குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா, வருவாய் அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் பேசினர்.