ADDED : பிப் 15, 2024 12:50 PM
ஓசூர்: ஓசூர் அருகே, டிப்பர் லாரி மோதி வக்கீல் பலியான நிலையில், அவரது கண்களை குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, புக்கசாகரத்தை சேர்ந்தவர் விஜயபாஸ்கர், 30. வக்கீல்; இவர், ஓசூர் வக்கீல் ஒருவரிடம் ஜூனியராக இருந்தார். நேற்று காலை, 9:00 மணிக்கு, பேரண்டப்பள்ளி - அத்திமுகம் சாலையில் உள்ள கதிரேப்பள்ளி அருகே, யமகா பைக்கில், ஹெல்மெட் அணியாமல் ஓசூர் நோக்கி வந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த வக்கீல் விஜயபாஸ்கர், சம்பவ இடத்திலேயே பலியானார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
உயிரிழந்த விஜயபாஸ்கரின் கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். தொடர்ந்து, பெங்களூரு நாராயணா நேத்ராலயா மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், கண்களை தானமாக பெற்றனர். அதற்கான சான்றிதழ் அவரது குடும்பத்தினரிடம், ஓசூர் வக்கீல் சங்க தலைவர் ஆனந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் வழங்கினார்.

