/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
161 பேருக்கு ரூ.67 லட்சம் மானியத்துடன் கடனுதவி
/
161 பேருக்கு ரூ.67 லட்சம் மானியத்துடன் கடனுதவி
ADDED : ஏப் 20, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி:தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் சேக்கிழார், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், காணொலி காட்சி வாயிலாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், கலைஞர் கைவினை திட்டத்தை துவக்கி வைத்தார். இதில், 8,951 கைவினை தொழில் முனைவோர்களுக்கு, 170 கோடி ரூபாய் கடன் ஒப்பளிப்பு மற்றும், 34 கோடி ரூபாய் மானியத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, நேரடி காணொலி காட்சி வாயிலாக, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர், 5 பேருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கினர்.
இது குறித்து, கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 373 பயனாளிகளுக்கான விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதில், 165 பயனாளிகளுக்கு, 1.65 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்படுகிறது. அவற்றில் இன்று மட்டும், 161 பேருக்கு, 67 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டது. கலைஞர் கைவினை திட்டத்தில் அதிகபட்சமாக, 50,000 வரை, 25 சதவிகித மானியத்துடன் கூடிய, 3 லட்சம் ரூபாய் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
இதில், பயன்பெற குறைந்தபட்ச வயது, 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், சிறு, குறு கைவினை தொழில்கள் உட்பட, 25 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.