/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தரைப்பால சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த லாரி
/
தரைப்பால சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த லாரி
ADDED : டிச 23, 2024 09:45 AM
ஓசூர்: ஓசூர் - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 6 இடங்களில் மேம்பால பணிகள் நடக்கிறது. அதனால் தினமும் அப்பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லவும், அங்கிருந்து ஓசூர் வரவும், 2 மணி நேரம் வரை ஆகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து பல டன் இரும்பு துண்டுகளை ஏற்றி கொண்டு, கர்நாடகா மாநிலத்திற்கு நேற்று மதியம் லாரி சென்றது.
சூளகிரி அருகே சாமல்பள்ளம் பகுதியில் உயர்மட்ட பாலம் வேலை நடக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறுகிய அளவிலான சர்வீஸ் சாலையில் மதியம், 3:30 மணிக்கு சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர சிறிய தரைப்பாலத்தின் பக்கவாட்டு சுவற்றை உடைத்து கொண்டு, 7 அடி பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதில், லாரியை ஓட்டி சென்ற டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன.