ADDED : ஆக 06, 2025 01:13 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரையிலுள்ள மகா முனியப்பன் சுவாமி கோவில் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஆடி, 18க்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமை நாளில், மகா முனியப்பன் சுவாமி கோவில் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று அதிகாலை விநாயகர், மகா முனியப்பன் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு, ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை, பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து பம்பை, சிலம்பாட்டத்துடன் பக்தர்கள் ஆணி செருப்பு அணிந்தும், வேல், கரகம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில், ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், அ.தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் சாகுல்அமீது, வடக்கு ஒன்றியச் செயலாளர் வேடி, மத்திய சாமிநாதன், நகர செயலாளர் ஆறுமுகம், கோவில் தர்மகர்த்தா மணி, பொருளாளர் பழனிசாமி, அறக்கட்டளை தலைவர் திருஞானம், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கருப்புசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர். மகாமுனியப்பன் கொங்கு நற்பணி மன்றத்தின் சார்பில், 14வது ஆண்டு அன்னதான நிகழ்வை, ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.