/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாட்டி, பேரனை கொன்ற நபருக்கு 'இரட்டை ஆயுள்'
/
பாட்டி, பேரனை கொன்ற நபருக்கு 'இரட்டை ஆயுள்'
ADDED : நவ 15, 2025 01:35 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதியைச் சேர்ந்தவர் சுபாஷ், 28; எம்.பி.ஏ., பட்டதாரி. இவர், 2023ல் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது, அங்கு பணிபுரிந்த அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசியா, 25, என்பவரை காதலித்தார்.
அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என கூறி, திருமணத்திற்கு சுபாஷ் தந்தை தண்டபாணி, 49, எதிர்ப்பு தெரிவித்தார். அதை மீறி அனுசியாவை, 2023 மார்ச் 27ல் சுபாஷ் திருமணம் செய்து, திருப்பத்துாரில் வசித்தார்.
இந்நிலையில், தண்டபாணியின் தாய் கண்ணம்மாள், 65, தன் பேரனான சுபாஷ், அனுசியாவை, அருணபதியில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார். இதையறிந்து, 2023 ஏப்., 15 அதிகாலை 4:00 மணிக்கு அங்கு வந்த தண்டபாணி, சுபாஷ், கண்ணம்மாளை அரிவாளால் வெட்டி கொன்றார்; அனுசியாவையும் வெட்டினார்; அவர் படுகாயங்களுடன் தப்பினார்.
வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை வழக்கில் ஊத்தங்கரை போலீசார், தண்டபாணியை கைது செய்தனர். இந்த வழக்கில், தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அனுசியாவை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் சிறை மற்றும் 8,000 ரூபாய் அபராதமும் விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்ற நீதிபதி லதா நேற்று தீர்ப்பளித்தார்.

