/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவை: 12 ஸ்டேஷன்கள், ஒரு பணிமனை அமைக்க திட்டம்
/
ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவை: 12 ஸ்டேஷன்கள், ஒரு பணிமனை அமைக்க திட்டம்
ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவை: 12 ஸ்டேஷன்கள், ஒரு பணிமனை அமைக்க திட்டம்
ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவை: 12 ஸ்டேஷன்கள், ஒரு பணிமனை அமைக்க திட்டம்
ADDED : ஆக 28, 2024 07:34 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படுகிறது. அங்கிருந்து, 12 கி.மீ., தொலைவிலுள்ள அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை நீட்டித்து, அங்கிருந்து 11 கி.மீ., தொலைவிலுள்ள தமிழக எல்லையான ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்தால், இரு மாநிலங்களுக்கு இடையே மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் எளிதாக பயணம் செய்ய முடியும்.
முந்தைய கர்நாடகா மாநில, பா.ஜ., அரசு மற்றும் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவை, மெட்ரோ ரயில் சேவையை துவங்க ஒப்புதல் அளித்தது. தமிழக அரசு சாத்தியகூறுகளை ஆய்வு செய்ய, 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதை இறுதி செய்வதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக், பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஷ்வர ராவை, பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்று சந்தித்து, ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ பாதையின் முக்கிய அம்சங்கள் பற்றி ஆலோசித்தார்.
தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன குழுவினர் மற்றும் ஆலோசகர்கள், ஓசூர் பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள ஓட்டலில், மாவட்ட கலெக்டர் சரயு, மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா ஆகியோரிடம் விரிவான ஆலோசனை நடத்தினர்.
பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை, 23 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்படும் மெட்ரோ ரயில் பாதையில், 12 மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் ஒரு பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஓசூர் - பெங்களூரு இடையே போக்குவரத்து மேம்படும் என, ஆலோசனையின் போது தெரிவிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) உட்பட பலர் பங்கேற்றனர்.