/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2024 01:19 AM
ஓசூர், டிச. 27-
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் நெங்குந்தியில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் உத்திரகுமார் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, மா.கம்யூ., செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பசும்பால் விலையை லிட்டருக்கு, 45 ரூபாயாகவும், எருமைப்பால் லிட்டர், 54 ரூபாயாகவும் அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
கால்நடைகளுக்கு ஆண்டுதோறும் பிப்., மற்றும் ஆக., மாதங்களில் இலவச தடுப்பூசி போட வேண்டும். ஆண்டுதோறும் பாலுக்கு விலை அறிவிக்க வேண்டும். ஆவினில் தினசரி பால் கொள்முதலை, ஒரு கோடி லிட்டராக உயர்த்த வேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
* தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், வீரனகுப்பம் பஞ்., காட்டனூர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன், நேற்று காலை கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாமலை பேசினார்.
கறவை மாடுகளுடன், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பெருமாள், தங்கதுரை, சின்னராஜ், கந்தசாமி,மாரிமுத்து, துரைசாமி, மாதேஷ், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* கெலமங்கலம் ஒன்றிய கமிட்டி சார்பில், அனுமந்தபுரம் பஞ்., நெல்லுகுந்தி கிராம ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய ஒன்றியத் தலைவர் துாரவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.