/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அருகே பால் வியாபாரி குத்திக்கொலை: கி.கிரி. மாவட்டத்தில் 2 மாதத்தில் 8 கொலை
/
ஓசூர் அருகே பால் வியாபாரி குத்திக்கொலை: கி.கிரி. மாவட்டத்தில் 2 மாதத்தில் 8 கொலை
ஓசூர் அருகே பால் வியாபாரி குத்திக்கொலை: கி.கிரி. மாவட்டத்தில் 2 மாதத்தில் 8 கொலை
ஓசூர் அருகே பால் வியாபாரி குத்திக்கொலை: கி.கிரி. மாவட்டத்தில் 2 மாதத்தில் 8 கொலை
ADDED : ஜன 08, 2024 12:28 PM
ஓசூர்: ஓசூர் அருகே, பால் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மாவட்டத்தில் இரண்டு மாதத்தில், 8 கொலை நடந்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலுார் அருகே எழுவப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ், 44, பால் வியாபாரி; ஓசூர் அருகே தில்லை நகர், ஹிமகிரி லே அவுட் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு தினமும் பைக்கில் சென்று பால் ஊற்றி வந்தார்; நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு பால் வினியோகத்தை முடித்து விட்டு, பஜாஜ் பைக்கில் வீடு திரும்பினார்.
எழுவப்பள்ளி சாலையில் வந்தவரை வழிமறித்த மர்ம கும்பல், கத்தியால் வயிற்றில் குத்தியும், தலையின் பின்பகுதியில் இரும்பு ராடால் தாக்கியதிலும் சம்பவ இடத்தில் பலியானார்.
பாகலுார் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். பலியான முனிராஜிக்கு மீனா, 36, என்ற மனைவியும், 17, 16, வயதில் இரு மகள்கள், 12 வயதில் மகன் உள்ளனர்.
கொலை குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: கொலையான முனிராஜுக்கு யாருடனும் முன்விரோதம் இல்லை. ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அவரது தந்தை கோபாலப்பா, 63, கடந்தாண்டு செப்.,ல் ஆந்திராவை சேர்ந்த சீனிவாசராவ் என்பவருக்கு, எழுவப்பள்ளி அருகே, 1.30 ஏக்கர் நிலத்தை விற்று கொடுத்துள்ளார்.
அந்த நிலம் தனக்கு சொந்தம் என, அப்பகுதியை சேர்ந்த சாந்தம்மா தரப்பினர் கூறி, நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்களிடம் நிலத்தை காலி செய்யுமாறு கோபாலப்பா கூறியுள்ளார். இதில் இரு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டு, பாகலுார் போலீசில் கடந்த செப்.,7ல் புகார் செய்யப்பட்டது. அதனால் கோபாலப்பாவை பழி வாங்க நினைத்து, அவரது மகன் முனிராஜை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகத்தின்படி சாந்தம்மா மகன் மது, உறவினரான விஜயகுமாரை தேடி வருகிறோம். அவர்களின் மொபைல்போன் 'சுவிட்ச் ஆப்'பில் உள்ளதால் சந்தேகம் அதிகரித்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.
67 நாளில் 8 கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ௬௭ நாட்களில் எட்டு கொலை நடந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, ஆருப்பள்ளியை சேர்ந்த தொழிலாளி கோபால், 41, கடந்த நவ., 14ல், குத்தகை ஏரியில் மீன் பிடித்ததால் கொலை செய்யப்பட்டார். தேன்கனிக்கோட்டை அருகே முத்துராயன்கொட்டாய் முத்துமணி, 22, கடந்த மாதம், 5ல் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலையானார். கடந்த டிச.,8ல், கட்டிகானப்பள்ளி சந்தோஷ், மகனை கழுத்தில் மிதித்து கொன்றார்.
பேரிகை அடுத்த முதுகுறுக்கி ஆதிதிராவிடர் காலனி துர்கேஷ், 25, தன் மனைவியின் கள்ளக்காதலன் மூலம் கடந்த டிச.,17ல் கொலை செய்யப்பட்டார். கடந்த டிச.,20ல், ஓசூர் பார்வதி நகரில் அலசநத்தம் தோட்டகிரி சாலையை சேர்ந்த பர்கத், ஆவலப்பள்ளி ஹட்கோ பழைய வசந்த் நகரை சேர்ந்த சிவா, 27, கும்பலால் கொலை செய்யப்பட்டனர். கடந்த, 5ல் ஓசூர் பேகேப்பள்ளியில் மளிகைக்கடை உரிமையாளர் திம்மராஜ், 40, குத்தி கொல்லப்பட்டார்.
இந்நிலையில் பால் வியாபாரி முனிராஜ் கொலையையும் சேர்த்து, 67 நாட்களில் எட்டு கொலை நடந்துள்ளது, மக்களை பீதியில் தள்ளியுள்ளது.