/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வணிக வளாகத்தை தனிநபருக்கு கொடுக்க எதிர்ப்பு; நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
வணிக வளாகத்தை தனிநபருக்கு கொடுக்க எதிர்ப்பு; நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வணிக வளாகத்தை தனிநபருக்கு கொடுக்க எதிர்ப்பு; நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வணிக வளாகத்தை தனிநபருக்கு கொடுக்க எதிர்ப்பு; நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : டிச 31, 2024 07:08 AM
கிருஷ்ணகிரி: வணிகவளாக குத்தகை உரிமத்தை, மீண்டும் அதே நபருக்கு நீட்டித்து கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்து பேசினார். மொத்தமுள்ள, 33 கவுன்சிலர்களில், 23 தி.மு.க., கவுன்சிலர்கள், 6 அ.தி.மு.க.,-- காங்., - பா.ஜ., கட்சிகளின் தலா ஒரு கவுன்சிலர் உள்பட, 31 பேர் கலந்து கொண்டனர். இரு தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்தில் பேசிய தி.மு.க., கவுன்சிலர் பாலாஜி, ''கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மெட்ரோ பஜார் வணிகவளாகத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. முதல்தளத்தில், 21 கடைகள் கட்டி வாடகைக்கு விட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை. குத்தகை எடுத்த கண்ணன், அவரது மனைவி குமுதா ஆகியோரால் கடந்த, 9 ஆண்டுகளாக நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.தி.மு.க., கவுன்சிலர் பிரதோஸ்கான் பேசுகையில், ''நகராட்சிக்கு வருவாய் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வணிகவளாகத்தில் கடைகள் கட்டி பலருக்கு பிரித்து வாடகைக்கு விடலாம். அதில் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். அதைவிடுத்து கண்ணன் என்பவருக்கு மட்டும் குத்தகை உரிமம் கொடுத்துள்ளனர். அவர் உள்வாடகைக்கு விட்டு லாபம் பார்த்து வருகிறார்,'' என்றார்.
தி.மு.க., கவுன்சிலர் புவனேஸ்வரி பேசுகையில், ''மெட்ரோ பஜாரை, வேறு நபர்களுக்கு வழங்க வேண்டும், கண்ணன் தரப்பினருக்கு வழங்க கூடாது என நகராட்சி கவுன்சிலர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், நீதிமன்றத்திற்கு அவர் சென்றார். அதனால் அதிகாரிகள் உத்தரவுப்படி அவருக்கே மீண்டும் குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது என தற்போது கூறுகிறீர்கள். அப்படியென்றால் கவுன்சிலர்களாகிய எங்கள் பேச்சுக்கோ, இயற்றிய தீர்மானத்திற்கோ மதிப்பில்லையா,'' என்றார்.காங்., கவுன்சிலர் வினாயகம் பேசுகையில், ''விதிமுறைகளை மீறியதாக கூறி மெட்ரோ பஜாருக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால், அவருக்கே மீண்டும் குத்தகை வழங்கப்பட்டுள்ளது ஏன் என புரியவில்லை. இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும். வணிகவளாகத்தின், 9 ஆண்டு குத்தகை காலம் முடிந்துள்ளதால், வேறு நபர்களுக்கு குத்தகை வழங்க வேண்டும்,'' என்றார்.
மெட்ரோ பஜார் வணிகவளாகத்தின் குத்தகை உரிமம், கண்ணன், குமுதா தரப்பினருக்கே மீண்டும் வழங்கப்பட்டதை கண்டித்து, தி.மு.க., - அ.திமு.க., - காங்., கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 'நகராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கையையும், குத்தகை உரிமத்தை ரத்து செய்யக் கோரியும் சிறப்பு தீர்மானமாக இயற்றி கொடுத்தால், அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு எடுக்கப்படும்' எனக் கூறினார். இதையடுத்து கவுன்சிலர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.