ADDED : மே 24, 2024 06:57 AM
கோவில் பூட்டை உடைத்து நகை, காணிக்கை திருட்டு
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அடுத்த ரங்கசந்திரத்தில் ஓம் சக்தி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அம்மன் கழுத்திலிருந்த தாலி, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றனர். நேற்று காலை இதையறிந்த கோவில் நிர்வாகத்தினர் புகார் படி தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கர்நாடக மது விற்றவருக்கு காப்பு
கிருஷ்ணகிரி: கெலமங்கலத்தை சேர்ந்த ரவி, 43, மத்திகிரி அம்மன் நகரில் தங்கியுள்ளார். இவர், கர்நாடக மது வகைகளை வீட்டில் பதுக்கி விற்பதாக, மத்திகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது வீட்டில் நேற்று போலீசார் சோதனையிட்டபோது, 133 மது பாக்கெட்டுகளில் கர்நாடக மது வகைகள் கள்ளசந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மர்மபொருள் வெடித்து பசு மாட்டின் வாய் சிதைவு
ஓசூர் : சூளகிரி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் ராஜப்பா, 40, விவசாயி; கடந்த, 21 மாலை இவர் வளர்த்து வந்த பசு மாடு கொல்லப்பள்ளி வனப்பகுதி அருகே மேய்ந்தது. அப்போது அங்கு கிடந்த ஒரு பொருளை, வாயில் போட்டு கடித்தபோது வெடித்து சிதறியது-. இதில், மாட்டின் வாய்ப்பகுதி சிதைந்து படுகாயமடைந்தது. ராஜப்பா புகார்படி பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.
கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்
ஓசூர் : விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் கனிம வள பிரிவு பறக்கும் படை பிரிவின் அதிகாரி ராமஜெயம் மற்றும் அதிகாரிகள் குழுவினர், நேற்று முன்தினம் ஓசூர், பத்தலப்பள்ளி அருகில் கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்டபோது அதில், கிரானைட் கற்கள் கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. அதிகாரி ராமஜெயம் புகார் படி, ஓசூர் அட்கோ போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற இருவர் கைது
ஓசூர் : ஓசூர் டவுன் போலீசார், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, சேலம் பஸ்கள் நிற்கும் இடம் அருகே சந்தேகப்படும் படி நின்ற, 2 பேரை சோதனை செய்தனர். அவர்களது பையில், 3 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் நெல்லை தச்சநல்லுாரை சேர்ந்த நெல்லையப்பன், 46, அருண்குமார், 34 என்பதும் கர்நாடக மாநிலத்திலிருந்து விற்பனைக்காக புகையிலை பொருட்களை கடத்த முயன்றதும் தெரிந்தது-. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.