ADDED : ஜன 05, 2024 10:39 AM
தேய்பிறை அஷ்டமியையொட்டி
காலபைரவர் கோவிலில் பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது.
கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, தட்சணகாசி காலபைரவருக்கு, அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன.
நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு யாக பூஜை நடந்தது. இதேபோல், தர்மபுரி நகர் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள பைரவருக்கு நேற்று, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்திவி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், மாவட்ட, வி.சி., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை நிலைய செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் நற்குமரன், மண்டல துணை செயலாளர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பை, தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். கிழக்கு மாவட்ட செயலாளர்
சாக்கன்சர்மா, மேற்கு மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் உள்பட, பலர் இதில்
பங்கேற்றனர்.
ரூ.19.46 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிக்கு அடிக்கல்
பென்னாகரம் பேரூராட்சியிலுள்ள, 18 வார்டுகளின் குடிநீர் தேவையை போக்க, 19.46 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த குடிநீர் மேம்பாட்டு பணிகள் மற்றும் நீர்குந்தியில், 2.77 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தர்மபுரி கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
இதில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து, 156 பயனாளிகளுக்கு, 80.14 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 11.84 லட்சம் ரூபாய் மதிப்பில், பென்னாகரம் பேரூராட்சிக்கு மின்கலன் மூலம் இயங்கும், 6 வாகனங்களை, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் பென்னாகரம் ஜி.கே.மணி, தர்மபுரி வெங்கடேஷ்வரன், தர்மபுரி ஆர்.டி.ஓ., கீதாராணி, தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் தடங்கம்
சுப்பிரமணி, பழனியப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சரிடம் தி.மு.க.,வினர்கோரிக்கை மனு வழங்கல்
அரூர் அடுத்த சிட்லிங்கில், நிழற்கூடம் கட்டும் பணி நடக்கிறது. இந்நிலையில், வேறு இடத்தில் நிழற்கூடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து, சிட்லிங்கை சேர்ந்த, தி.மு.க.,வினர் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் மனு அளித்தனர். இருந்தபோதிலும், அதே இடத்தில் நிழற்கூடம் கட்டும் பணி தொடர்ந்து நடக்கிறது.
பள்ளி மாணவ, மாணவியருக்கு
அரசின் விலையில்லா சைக்கிள்
பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 257 மாணவியர், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 125 மாணவர்களுக்கு என மொத்தம், 382 பேருக்கு, அரசின் விலையில்லா சைக்கிளை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.
இதில், தர்மபுரி தி.மு.க., எம்.பி.. செந்தில்குமார் டி.ஆர்.ஓ., பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் பென்னாகரம் ஜி.கே. மணி, தர்மபுரி வெங்கடேஸ்வரன், சி.இ.ஓ.. ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சிறுவன் மீது போக்சோ
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியும், 17 வயது சிறுவனும் கடந்த, 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த செப்., 3ல் மருதமலை முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோவையில் தனியாக வசித்தனர். இந்நிலையில் கர்ப்பமடைந்த சிறுமி வயிற்றுவலியால், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமி புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
அரூரில் அலுவலகம்
திறக்கும் அரசியல் கட்சிகள்
தர்மபுரி மாவட்டம், அரூரில், அ.தி.மு.க., - வி.சி., கட்சி அலுவலகங்கள் ஏற்கனவே, வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மா.கம்யூ., கட்சிக்கு சொந்த கட்டடத்தில் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், கடந்த, டிச., 27ல் அரூர் கோவிந்தசாமி நகரில், வாடகை கட்டடத்தில் அரூர் சட்டசபை, தி.மு.க., கட்சி அலுவலகத்தை தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் திறந்து வைத்தார். வரும், 8ல் அரூருக்கு, 'என் மண் என் மக்கள்' யாத்திரைக்கு, பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை வர உள்ளார். இதையடுத்து, கடந்த, 31ல், அரூரில், பா.ஜ., சட்டசபை தொகுதி அலுவலகத்தை மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் திறந்து வைத்தார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கு ஆயத்தமாகும் வகையில், அரசியல் கட்சிகள் அரூரில் அலுவலகங்களை திறந்து வருகின்றன.
வி.சி., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, மாவட்ட வி.சி., கட்சியின் சார்பில் நேற்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் மாதேஷ், குபேந்திரன், செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 2024ல் நடக்கும் லோக்சபா பொதுத்தேர்தலில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தென் மாவட்ட பெருமழை வெள்ள பாதிப்புகளை, தீவிர பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும், இதற்கு நிவாரணமாக, 21,000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மண்டல செயலாளர் தமிழ்அன்வர், மாநில துணை செயலாளர் ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
பேக்கரியில் பெட்ரோல் குண்டு
வீசியவர் கி.கிரி கோர்ட்டில் சரண்
வாணியம்பாடி பேக்கரியில், பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் ஒருவர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆம்பூரை சேர்ந்த தமிழருவி என்பவர், 'கருணா ஸ்வீட்ஸ்' என்ற பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த, 2023 டிச., 30 இரவு, 11:00 மணியளவில் டூவீலரில் வந்த மூவர் பேக்கரி மீது, 3 பெட்ரோல் குண்டுகளை வீசினர். ஒரு பெட்ரோல் குண்டு வெடித்ததில் பேக்கரியில் வேலை செய்யும் ஒருவர் காயமடைந்தார். தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். வாணியம்பாடி போலீசார் முகம்மது வசீம், நர்மதன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த, வாணியம்பாடியை சேர்ந்த முகம்மது சதாம், 26 என்பவர் கிருஷ்ணகிரி நடுவர் நீதிமன்றம் 2ல், நீதிபதி ஸ்ரீவத்சவா முன்னிலையில் நேற்று சரணடைந்தார்.
ஓசூர் வனப்பகுதியிலிருந்து
யானைகளை விரட்டும் பணி
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன், 80க்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்தன. இதில், 60க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த இரு வாரத்திற்கு முன், கர்நாடக வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், 18 யானைகள் தனியாக பிரிந்து, தேன்கனிக்கோட்டை, சானமாவு வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்தன. இரவு நேரங்களில், வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. ஓசூர் வனப்பகுதிக்குள் சுற்றித்திரியும் யானைகளை தேன்கனிக்கோட்டை வழியாக கர்நாடக வனத்திற்குள் விரட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், நேற்று மாலை பட்டாசு வெடித்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை, சானமாவு வனப்பகுதியிலிருந்து விரட்டினர். இதையடுத்து யானைகள் கெலமங்கலம் உத்தனப்பள்ளி சாலையில், போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் அருகிலுள்ள பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு உட்பட்ட பேவநத்தம் நோக்கி சென்றன. அதேபோல் இந்த யானை கூட்டங்களிலிருந்து பிரிந்த ஒற்றை யானை, ஓசூர் வனச்சரகத்தையொட்டியுள்ள போடூர்பள்ளத்தில் சுற்றி வருகிறது. அந்த யானையை கண்காணித்து விரட்டும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பைக் மோதி வாலிபர் பலிஓசூர், தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் முனிராஜ், 28. இவர், கடந்த, 2ல் இரவு எப்சட் பைக்கில் ஓசூரிலிருந்து, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது முன்னாள் சென்ற டிப்பர் லாரி, திடீரென நின்றதால், பின்னால் சென்ற பைக், லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், முனிராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
சிமென்ட் சாலை அமைக்க பூஜை
தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, 8வது வார்டு கிட்பாய் தெருவில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய், சிறுபாலம் பணிக்கு பூமிபூஜை
நடந்தது.
டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீனிவாசன் பணிகளை துவக்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் முஜாமில் பாஷா, மேற்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் முதஷீர் பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ஜேம்ஸ்குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், பி.டி.ஓ.,க்கள் முருகன், சுப்பிரமணி ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்பி, அவுட்சோர்சிங் நியமன நடைமுறையை கைவிட வேண்டும். கிராம வளர்ச்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட விடுபட்டுள்ள அனைத்து உரிமைகளையும் உடனே வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், மாநில செயற்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துணிப்பையின் அவசியத்தை பெற்றோருக்கு
எடுத்து கூற பி.டி.ஏ., கூட்டத்தில் வலியுறுத்தல்
துணிப்பையின் அவசியத்தை பெற்றோருக்கு எடுத்து கூற வேண்டுமென, பி.டி.ஏ., கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் வளர்மதி தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் சுப்பிரமணி, முன்னிலை வகித்தார்.
இதில், பொதுவாக ஒவ்வொரு நகரிலும் முக்கிய பிரச்னையாக இருப்பது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் கவர் பயன்பாட்டால், தேங்கி கிடக்கும் குப்பை. இவை சாலையோரமும், சாக்கடைகால்வாய்களிலும் வீசி செல்வதால், சுகாதார சீர்கேடு, மண்வளம் பாதிக்கப்படுகிறது. மக்கா பொருட்களான இவற்றை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்துமாறு மாணவியர் எடுத்துக்கூற அறிவுறுத்தப்பட்டது. நிறைவாக அனைவருக்கும், 'மஞ்சப்பை' வழங்கப்பட்டது.
இதில், தி.மு.க., அமைப்புசாரா மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.
காலபைரவர் கோவில்களில்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக, மஹாலட்சுமி மற்றும் காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்
பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. தங்கக்கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.
இதில், ஏராளமான பெண்கள், பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் செய்திருந்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் காலபைரவர் கோவில் மற்றும் சூரன்குட்டை தட்சிண காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.
இல்லம் தேடி சென்று மா.திறனாளிகள்
விபரங்களை சேகரிக்க அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி டவுன் பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் இணையதள செயலியில், மாற்றுத்திறனாளிகளின் விபரங்கள் பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு வாகன துவக்க விழா நடந்தது.
வாகனத்தை மாவட்ட கலெக்டர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்து, பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு கணக்கெடுப்பு பணிகள், மகளிர் மேம்பாட்டு திட்ட களப்பணியாளர்களை கொண்டு, இணையதள செயலி மூலம் பதிவு செய்யப்படுகிறது. இது தொடர்பாக அனைத்து பகுதி பஸ் ஸ்டாண்டுகளிலும் இன்று முதல் விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. களப்பணிக்கு செல்லும் அலுவலர்கள் கனிவாகவும், மென்மையாகவும் இல்லம் தேடி சென்று மாற்றுத்திறனாளிகளின் தரவுகளை பெற வேண்டும். யாரும் விடுபட கூடாது.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், கிருஷ்ணகிரி தாசில்தார் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.