sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 16, 2024 10:29 AM

Google News

ADDED : ஜன 16, 2024 10:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தை மாத பிறப்பையொட்டி

கோவில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதி கோவில்களில் பொங்கல் விழா மற்றும் தை மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி சந்திரமவுலீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், காந்தி நகர் வலம்புரி விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் உள்ளிட்ட பூஜை நடந்தது. மார்கழி மாதத்தை ஒட்டி தினமும் சிறப்பு பூஜை நடந்துவந்த நிலையில், நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், தை மாத பிறப்பையொட்டி சுவாமிக்கு விசேஷ அலங்காரம் நடந்தது.

அதேபோல கணவாய்பட்டி வெங்கட்ட ரமண சுவாமி கோவில், அக்ரஹாரம் பாண்டுரங்கர் கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில்களில் பொங்கல் திருநாள் மற்றும் தை மாத பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தி.மு.க., - தே.மு.தி.க.,வினர் 50 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பன்னிஹள்ளி பஞ்,க்கு உட்பட்ட பூ நகர் பகுதியை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலாளர்கள் சிலோன்மணி, ராஜா மற்றும் தே.மு.தி.க., கிளை கழக செயலாளர் மகாலிங்கம் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோர் நேற்று, அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி முன்னிலையில் தங்களை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர்.

அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

லாரி மீது பைக் மோதல்3 வயது குழந்தை சாவு

காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரமடத்தை சேர்ந்தவர் செண்பகம், 26; இவர் கடந்த, 13ல் தன் மூன்றரை வயது மகன் மித்ரனுடன் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். பைக்கை அவரது உறவினர் சந்தோஷ், 21 என்பவர் ஓட்டினார். இரவு, 7:30 மணியளவில் ஆத்தோரன்கொட்டாய் அருகில் தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அப்போது முன்னாள் சென்ற லாரி, திடீரென எந்தவித சிக்னலும் இல்லாமல் நின்றதால், கட்டுப்பாட்டை இழந்த பைக், லாரியின் பின்னால் மோதியது. இதில், மூன்றரை வயது குழந்தை மித்ரன் சம்பவ இடத்திலே இறந்தான். செண்பகம், சந்தோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஐ.டி., ஊழியரை தாக்கியஆம்னி பஸ் டிரைவர் கைது

பெங்களூரு, திப்பச்சந்திராவை சேர்ந்தவர் வினோத்குமார், 31; ஐ.டி., கம்பெனி ஊழியர். இவர், கடந்த, 13ல் மாலை, 4:30 மணியளவில் சுண்டகிரி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில், ஆம்னி வேனில் சென்றுள்ளார். அப்போது, பின்னால் ஒரு ஆம்னி பஸ் வந்துள்ளது. பஸ்சை பர்கூர் எலத்தகிரியை சேர்ந்த செபஸ்டின், 32, என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர், நீண்ட நேரமாக ஹாரன் அடித்தும், ஆம்னி வேன் வழி விடாத ஆத்திரத்தில் பஸ்ஸை, வேன் முன்பு மறித்து நிறுத்தியுள்ளார். மேலும், ஆம்னி வேனை ஓட்டிய வினோத்குமாரையும் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த வினோத்குமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, சூளகிரி போலீசார் செபஸ்டினை கைது செய்தனர்.

நாயக்கனுாரில் காரைக்களம்ரூ.7.90 லட்சத்தில் அமைப்பு

ஊத்தங்கரை அடுத்த, நாயக்கனுாரில், மாவட்ட கவுன்சிலர் மேம்பாட்டு திட்டத்தில், காரைக்களம் அமைக்கும் பணிக்கு, 7.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வேங்கன், வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணி, பஞ்., தலைவர் சின்னசாமி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இரும்பு கம்பி திருடியவர் கைதுகிருஷ்ணகிரி அடுத்த நேதாஜி நகரை சேர்ந்தவர் முனிராஜ், 64; இவர், அதே பகுதியில் வெல்டிங் மற்றும் இன்ஜினியரிங் கடை வைத்துள்ளார். கடந்த, 12ல் இரவில் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், கடையிலிருந்த, 90 கிலோ இரும்பு கம்பிகளை திருடி சென்றனர். இது குறித்து முனிராஜ், கே.ஆர்.பி.,டேம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், கடையில் இரும்பு கம்பிகளை திருடியது பெங்களூரு, ஜே.பி., நகரை சேர்ந்த பாண்டிசெல்வம், 40, என்பது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து இரும்புக்கு கம்பிகளை மீட்டனர்.

பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த

மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட 34 பஞ்.,களில் இருந்து பொதுமக்கள், பொங்கல் புத்தாடைகள் மற்றும் கரும்பு, மஞ்சள், பூசணி, மாட்டுக்கயிறு உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க நேற்று ஊத்தங்கரையில் குவிந்தனர். இதனால், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, ஊத்தங்கரை அரசமரம் வீதி மையப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊத்தங்கரை போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுவிலக்கு அமலாக்க பிரிவில்

சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலக வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, மதுவிலக்கு அமலாக்க துறை இன்ஸ்பெக்டர்

மஞ்சுளா தலைமையில், புதுப்பானையில் பொங்கல் வைத்து, செங்கரும்பு வைத்து படையலிட்டு வழிபட்டனர். இதில், எஸ்.ஐ., சிற்றரசு, எஸ்.எஸ்.ஐ.,சிவகாமி, செண்பகவள்ளி, குல்ஷார் பேகம், போலீசார் பிரகாசம்,நவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி சமத்துவபுரத்தில்

சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் நேற்று, சமத்துவ பொங்கல் விழா நடந்தது. காட்டிநாயனப்பள்ளி பஞ்., தலைவர் மஞ்சுளா மற்றும் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் கலா வேலாயுதம் தலைமை வகித்தனர்.

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் போதியளவு தண்ணீர் உள்ளதால், விவசாயிகள், நல்ல முறையில் விவசாயம் செய்து செழிப்புடன் வாழ வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து கோலப்போட்டி, குழந்தைகள், பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பபட்டன.

கல்லுாரி மாணவி மாயம்

வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ஓனிஷா, 20. திருச்செங்கோட்டில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு பி.இ., படித்து வருகிறார். இவர், பொங்கல் விடுமுறைக்காக கடந்த, 13ல் கல்லுாரியில் இருந்து வீட்டிற்கு பஸ்சில் வந்துள்ளார். தேன்கனிக்கோட்டை அருகே பஸ்சிலிருந்து இறங்கியவர் மாயமானார். அதன் பின் அவர், எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதில், பெங்களூரு, பொம்மனஹள்ளியை சேர்ந்த சரத், 27, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில்

பொங்கல் விழா

கடத்துார் போலீஸ் ஸ்டேஷனில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில், கடத்துார் அடுத்த அஸ்திகிரியூர் கிராமத்தில் உள்ள, 'பாய்ஸ், கேர்ள்ஸ் போலீஸ் கிளப்' மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கு, இசை நாற்காலி, உரியடித்தல், கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில், மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், அரூர் டி.எஸ்.பி., நாகராஜன், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., கெய்க்வாட் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

5 உழவர் சந்தைகளில்

78 டன் காய்கறி விற்பனை

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து உழவர் சந்தைகளில் நேற்று, 78 டன் காய்கறிகள் விற்பனையாகின.

தைத்திருநாள் பொங்கலான நேற்று, தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 உழவர் சந்தைகளில் மொத்தம், 78 டன் காய்கறிகள் விற்பனையாகின. அதன்படி, தர்மபுரி உழவர் சந்தையில் மட்டும், 30 டன் காய்கறிகள் விற்பனையானது. விற்பனைக்கு, 112 விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளை, 6,060 நுகர்வோர் வாங்கிச் சென்றனர். இதேபோல், அரூர் உழவர் சந்தையில், 11 டன் காய்கறிகளும், பாலக்கோடு உழவர் சந்தையில், 12 டன் காய்கறிகளும், பென்னாகரம் சந்தையில், 9 டன் காய்கறிகளும், ஏ.ஜெட்டிஹள்ளி உழவர் சந்தையில், 16 டன் காய்கறிகளும் என, மொத்தம் ஐந்து உழவர் சந்தைகளிலும் சேர்த்து நேற்று ஒரு நாள் மட்டும் மொத்தம், 78 டன் காய்கறிகள், 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.

தண்ணீர் தொட்டியில்

விழுந்து தொழிலாளி சாவு

எர்ரணஹள்ளியில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

பீஹார் மாநிலம், மதுபாணியை சேர்ந்தவர் தேவ்நாராயணன், 44. இவர், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எர்ரணஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த, 7 மாதங்களாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த, 13ல் இரவு கம்பெனி அருகே இருந்த தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து மது குடித்தபோது தவறி தொட்டியில் விழுந்துள்ளார். மது போதையில் இருந்ததால், அவரால் எழ முடியாமல் நீரில் மூச்சுத்திணறி இறந்துள்ளார். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

அரூரில் பூ மாலை விலை 'விர்'

அரூர் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, கச்சேரிமேடு, வர்ணதீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பூ கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று பூ மாலைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. பல கடைகளில் காலை, 11:00 மணிக்குள் விற்றுத் தீர்ந்தன. வழக்கமாக, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பூ மாலை ஒன்று, நேற்று, 120 முதல், 150 வரை ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் ஆகியவற்றின் விலையும், கிலோவிற்கு, 20 முதல், 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்றன.

தொழிலாளி வீட்டில்

நகை, பணம் திருட்டு

பொம்மிடி அடுத்த திப்பிரெட்டிஹள்ளி சந்தனுார்மேடு, காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் தங்கமணி, 46, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 11 ல் காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின், மாலை வந்தபோது, வீடு திறந்து கிடந்த நிலையில், வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தன. இதில், வீட்டிலிருந்த கால் பவுன் தோடு, 23,500 ரூபாய், மொபைல்போன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை

சிறப்பாக கொண்டாட வேண்டுகோள்

தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 107வது பிறந்தநாள் விழா, நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில் மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்த வேண்டும். மேலும், அந்தந்த பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு அன்னதானமும், நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும். அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, பஞ்., கிளை மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் அனைவரும், இதில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

கல்லுாரி மாணவி மாயம்

ஆத்துாரை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவி, கடத்துாரிலுள்ள தன் பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு வந்தார். கடத்துார் பஸ் ஸ்டாண்டில் கடந்த, 13ல் பிற்பகல் பஸ்சிலிருந்து இறங்கியவர், மாயமானார். புகார்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

அரூர் ஜி.ஹெச்.,ல் சமத்துவ பொங்கல்

அரூர் அரசு மருத்துவமனையில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைமை மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார். மருத்துவமனை வளாகத்தில், வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

இதேபோல், அரூர் போலீஸ் ஸ்டேஷனில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மூதாட்டி வீட்டில் திருடியவர் கைது

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டியை சேர்ந்தவர் ராமம்மாள், 78; இருகண்களும் தெரியாத நிலையில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த, 13ல் காலை, 8:30 மணிக்கு கோட்டப்பட்டியை சேர்ந்த காதர்பாஷா, 38; என்பவர் ராமம்மாள் வீட்டில் இருந்து பித்தளை குடம், சொம்பு மற்றும் குத்துவிளக்குகளை திருடிக் கொண்டு வெளியில் வந்துள்ளார். அப்போது, ராமம்மாளின் மருமகள் சின்னபிள்ளை, எதற்கு பொருட்களை எடுத்துச் செல்கிறாய் எனக் கேட்ட போது தப்பியோடினார். புகார்படி, கோட்டப்பட்டி போலீசார் காதர்பாஷாவை கைது செய்தனர்.

ஸ்டான்லி பள்ளி ஆண்டு விழா

பொங்கல் கொண்டாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 46வது ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளி தாளாளர், ஸ்டான்லி கல்விக் குழுமங்களின் சேர்மன் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் சாந்தா முருகேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் வரவேற்றார். தனியார் 'டிவி' நிகழ்ச்சி பங்கேற்பாளர் அறந்தாங்கி நிஷா, பட்டிமன்ற பேச்சாளர் நித்யா ஆகியோர் பேசினர். பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. தேர்வு, விளையாட்டு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பால் அவதிதர்மபுரி டவுன் மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்ட் ஒரே இடத்தில் உள்ளது. இவற்றை சுற்றியுள்ள, 4 வீதிகளில் ஜவுளி, நகை, ஓட்டல், பேன்சி, பூக்கடை, காய்கறி மற்றும் பழக்கடைகள் உள்ளன.

அங்கு பொருட்களை வாங்க பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஏராளமான மக்கள் கூடினர். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, தர்மபுரி போக்குவரத்து போலீசார் சாலையில் தடுப்புகள் அமைத்தனர். மேலும், வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்தியும், ஒருவழிப்பாதையில் செல்லவும் அறிவுறுத்தி இருந்தனர்.

ஆனால், வாகன ஓட்டிகள் அவர்கள் நினைத்த இடத்தில் அவர்களின் பைக்குகளை நிறுத்தி விட்டுச் சென்றனர். சாலையில் பொதுமக்களின் கூட்டமும் அதிகமிருந்ததால் போக்குவரத்து பாதித்து, அதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us