sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 26, 2024 10:15 AM

Google News

ADDED : ஜன 26, 2024 10:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழிப்புணர்வு பேரணி

அரூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணியை, அரூர் தாசில்தார் கனிமொழி துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக, சென்ற பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சிறுவர்கள் மாயம்

தர்மபுரி அடுத்த வெண்ணம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி மகாலட்சுமி, 32. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில், சர்வேஸ்வரன், 9 சஞ்சய், 7 என்ற இரு மகன்கள் இருந்தனர். அதில் சர்வேஸ்வரன், சஞ்சய் ஆகிய இருவரும் கடந்த, 23 அன்று அருகில் உள்ள பார்க்கில் விளையாட சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. காணாமல் போன சிறுவர்கள் குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்லுாரி மாணவி மாயம்

கடத்துார் அடுத்த நல்லகுட்லஹள்ளி, நடுர் கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவரது மகள் பிரியதர்ஷினி, 21. இவர் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எட்., 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த, 23ல் இரவு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொம்மிடியில் எக்ஸ்பிரஸ்

ரயில் கூரை மீது ஏறிய நபர்

கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து தன்பாத் வரை செல்லும் ஆலப்புழா தன்பாத்து எக்ஸ்பிரஸ் நேற்று மதியம் தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனுக்கு, 3:56 மணிக்கு வந்தது. அப்போது, ரயிலில் வந்த, திருப்பூர் தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வரும் ஜார்கண்ட் மாநிலம் சோனுஹா மாவட்டம், பால்ரன்ஜி கிராமத்தை சேர்ந்த மோதிலால் மடோ, 55, திடீரென ரயிலின் கூரையில் ஏறி அமர்ந்து கொண்டார். அவர் எந்நேரமும் ரயில் பெட்டி மீதுள்ள மின்கம்பியில் உரசி தீப்பிடிக்கும் நிலை ஏற்பட்டது. பொம்மிடி ரயில்வே நிலைய அதிகாரி நந்தி சோவான், மின் இணைப்பை துண்டித்தார். ரயில்வே போலீசார் மோதிலால் மடோவை பாதுகாப்பாக மீட்டு, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், 19 நிமிட தாமதமாக, 4:15 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

கொத்தவரங்காய்

விலை உயர்வு

தர்மபுரி மாவட்டத்திலுள்ள, ஐந்து உழவர்சந்தைகளில், கொத்தவரங்காய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் ஒரு கிலோ கொத்தவரங்காய், 30 ரூபாய்க்கு விற்றது. பின், விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஒருகிலோ, 46 ரூபாய்க்கும், நேற்று, 50 ரூபாய் எனவும் விற்பனையானது.

மொழிப்போர்

தியாகிகளுக்கு

வீரவணக்கம்

கிருஷ்ணகிரியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் சார்பில், தமிழ் மொழிக்காக போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதா கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சாலை விபத்தில்

தொழிலாளி பலி

திருப்பத்துார் மாவட்டம், அத்தியூரை சேர்ந்தவர் இளையராஜா, 42, கூலித்தொழிலாளி; இவர், கடந்த, 23ல், சூளகிரி வந்தார். இரவு, 7:30 மணியளவில், அட்டகுறுக்கி பஸ் ஸ்டாப் அருகில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரையில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, ஊத்தங்கரை தாசில்தார் திருமலைராஜன் மற்றும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால் முருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பேரணியில், அதியமான் மகளிர் கலை கல்லுாரி மாணவியர், 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, 'வாக்களிக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம், வாக்களித்து நம் நாட்டை வலிமையாக்குவோம், வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம்' போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

தாசில்தார் ஆபீஸ் முன்பு தொடங்கிய பேரணி ஊத்தங்கரை முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

தேசிய வாக்காளர் தின

விழிப்புணர்வு பேரணி

போச்சம்பள்ளியில் நேற்று, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, போச்சம்பள்ளி தாசில்தார் திருமுருகன் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதில் வாக்களிப்பதின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில், 200க்கும் மேற்பட்டோர் நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு வேடம் அணிந்து சென்றதுடன், கிராமிய கலைக்குழு சார்பில், கோலாட்டம் ஆடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வழியாக தாசில்தார் அலுவலகம் வரை சென்றது. இதில் தேர்தல் தாசில்தார் பாரதி, துணை தாசில்தார் ரஹமத்துல்லா மற்றும் ஆர்.ஐ.,கள், வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.

வடலுார் வள்ளலார்

தைப்பூச திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கீழ்குப்பம், பாப்பானுாரில், வடலுார் வள்ளலாரின், 2ம் ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த ஊரில் கடந்தாண்டு புதியதாக கட்டப்பட்டுள்ள, வடலுார் வள்ளலாரின் பெருமையை விளக்கும் வகையில் சிற்சபை, பொற்சபை, ஜோதி கோபுரம், அன்னதான மண்டபம், ராஜகோபுரம் உள்ளிட்டவைகளை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்திற்கு மேலும் மெருகேற்றும் வகையில் புதிய கோபுரம் அமைத்து, 201வது நுாற்றாண்டு விழா கொண்டாடினர். இதில், ஆறு கால பூஜையாக ஜோதி ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆதரவற்ற முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக புடவை, வேட்டி, துண்டுகளுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நிர்வாகி கிருஷ்ணன், ஊர் முக்கியஸ்தர்கள் மகாலிங்கம், நல்லாசிரியர் விருது பெற்று, ஓய்வுபெற்ற ஆசிரியர் தேவராஜ், சம்பத் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள், பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.

தேசிய வேளாண் சந்தை: விவசாயிகளுக்கு பயிற்சி

சூளகிரி வட்டாரம், மகாதேவபுரம் கிராமத்தில், அட்மா திட்டத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் உட்கட்டமைப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண் உதவி இயக்குனர் ஜான் லூர்து சேவியர் தலைமை வகித்து பேசியதாவது: மின்னணு தேசிய வேளாண் சந்தையில் வர்த்தகத்தில், வெளிப்படை தன்மை மற்றும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விவசாயிகள், மொத்த வியாபாரிகள், பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மாநில அளவில் அனைத்து சந்தைகளிலும் வர்த்தகம் மேற்கொள்ள வியாபாரிகளுக்கு ஒன்றுபட்ட ஒற்றை உரிமம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பரிவர்த்தனைகளை மொபைல் மூலம் தெரிந்து கொள்ளலாம். இடைத்தரகர்களின் இடையூறும் இருக்காது.

இவ்வாறு, அவர் பேசினார்.

அதியமான் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கார்த்திக், கால்நடை பராமரிப்பு துறை அலுவலர் வினோத், தோட்டக்கலை துறை உதவி அலுவலர் முருகன், உதவி வேளாண் அலுவலர் முருகேசன், ஆகியோர் பண்ணைக்கருவிகள், இலவசமாக வழங்கப்படும் நாற்றுகள், மானியங்கள் குறித்து பேசினர். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முஹம்மது ரபி மற்றும் பழனிசாமி செய்திருந்தனர்.

மூதாட்டி உட்பட 4 பேர் மாயம்

ஓசூர், சிப்காட் அடுத்த நல்லுார் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் மோனிஷா, 20, தனியார் நிறுவன ஊழியர்; கடந்த, 18ல் காலை வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மோனிஷாவின் பெற்றோர் ஓசூர் சிப்காட் போலீசில் புகாரளித்தனர். அதில், ஓசூர், அரசனட்டியை சேர்ந்த சிவசக்தி, 25 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

* பர்கூர் அடுத்த எலத்திகிரியை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி, 33. கிருஷ்ணகிரியிலுள்ள துணிக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த, 22ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இவரது கணவர், கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியை சேர்ந்த ஜாபர் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

* சிங்காரப்பேட்டை அடுத்த இலவம்பாடியை சேர்ந்தவர் சபி, 20, மூன்றாமாண்டு கல்லுாரி மாணவி; கடந்த, 23ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இவரது பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டம், மொட்டக்கல்லை சேர்ந்த சுரேஷ், 23 என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

* வேப்பனஹள்ளி அடுத்த பூதிமுட்லுவை சேர்ந்த மூதாட்டி சீதாம்மா, 63. இவர் கடந்த, 20ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது மகன் புகார்படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்லுாரி மாணவ, மாணவியருக்கான

தடகள போட்டியில் பங்கேற்க அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் நுாற்றாண்டு விளையாட்டு போட்டிகள், கல்லுாரி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகள் வரும் பிப்., 2ல் காலை, 8:30 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. இதில், 100 மீ., 200 மீ., 1,500 மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடக்க உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, கல்லுாரி மாணவ, மாணவியர் இதில் பங்கேற்கலாம். போட்டிக்கு, கல்லுாரி படிப்பு சான்றிதழுடன் பங்கேற்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, முதல், 3 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக, 3,500 ரூபாயும், 2ம் பரிசாக, 1,500 ரூபாயும், 3ம் பரிசாக, 500 ரூபாயும் வழங்கப்படும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பிப்., 10ல் பொறுப்பு அமைச்சர் தலைமையில் நடக்கும் கலைஞர் நுாற்றாண்டு பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us