ADDED : பிப் 13, 2024 11:06 AM
மாணவர் காவல் படை
அரசு பள்ளியில் தொடக்கம்
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுார் அரசு உயர் நிலைப் பள்ளியில், மாணவர் காவல் படை தொடக்க விழா, தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முரளி வரவேற்றார். பாப்பிரெட்டிப்பட்டி எஸ்.ஐ., நேரு, மாணவர் காவல் படையை தொடங்கி வைத்து, அவர்களுக்கு சீருடையை வழங்கி பேசினார். இதில், 8, 9ம் வகுப்பு மாணவர்கள், 39 பேர் சேர்ந்து உள்ளனர். இவர்களுக்கு போலீசார் சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு, சமூக தீமைகளுக்கு எதிராக பணிபுரிதல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆசிரியர் கோட்டி நன்றி கூறினார்.
உயர் மின் கோபுர விளக்கு
5 இடங்களில் திறப்பு
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், கடத்துார் ஆதி திராவிடர் காலணி, புதுரெட்டியூர், சில்லாரஹள்ளி, பையர்நத்தம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உயர் மின் கோபுர விளக்கும், கடத்துார் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு நிழற்கூடம், நத்தமேடு அரசு மேல் நிலை ப்பள்ளியில் நவீன வசதியுடன் கூடிய கழிவறை கட்டிடத்தையும் தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., டாக்டர் செந்தில்குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுார் பொன்மாரியம்மன்திருவிழா கொடியேற்றம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிலுள்ள ஸ்ரீபுதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா, ஒவ்வோர் ஆண்டும், மாசி மகம், பவுர்ணமியையொட்டி நடப்பது வழக்கம். அதையொட்டி இந்த ஆண்டும் வரும் பிப்., 19ல் தொடங்கி, 23 வரை கோவில் திருவிழா நடக்கவுள்ளது. முன்னதாக, நேற்று, கோவில் வளாகத்தில், பூஜை செய்து, பந்தக்கால் நட்டு, கொடியேற்றப்பட்டது.
மருத்துவமனை ஊழியர் வீட்டில்
7 பவுன் நகை, பணம் திருட்டு
தர்மபுரி அருகே நெல்லி நகரை சேர்ந்தவர் தங்கதுரை, 30; இவர், அனுமந்தபுரம் அரசு மருத்துவமனையில், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த, 9ம் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊருக்கு சென்றார். பின், 11ம் தேதியன்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்தது. மேலும், பீரோ லாக்கரில் இருந்த, 7 பவுன் நகை மற்றும் 30,000 ரூபாய் உள்ளிட்டவை, திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
2,500 மரக்கன்றை காக்கும்100 நாள் பணியாளர்கள்
ஜருகு ஏரிக்கரை பகுதியில், 2,500 மரக்கன்றுகளை, கடும் வறட்சியில் இருந்து பாதுகாக்க, குடங்கள் மூலம், தண்ணீர் ஊற்றி காக்கும் பணியில், 100 நாள் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, மானியதஹள்ளி பஞ்., உட்பட்ட ஜருகு ஏரிக்கரை பகுதியில், பஞ்., பொதுநிதி முலம், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தென்னை, கொய்யா, ஜம்பு நாவல் உள்ளிட்ட, 2,500-க்கும் மேற்பட்ட பலன் தரும் மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கடும் வெயில் மற்றும் வறட்சி தொடங்கி உள்ளதால், மரக்கன்றுகளை பாதுகாக்க, 100 நாள் பணியாளர்கள், குடங்கள் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
அடிப்படை வசதிக்கு கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 15 வது வார்டு தமாணிகோம்பை பகுதியில், 250க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நான்கு தெருக்கள் உள்ளன. இதில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவுகிறது.
பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வசதி, செய்து தரப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்திடமும் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குடிநீர் தொட்டி அமைக்க வேண்டுகோள்
தர்மபுரி அருகே, செட்டிகரை பஞ்.,க்கு உட்பட்ட இந்திரா நகர், ராஜாபேட்டை, காமராஜ் நகர், ஆத்துமேடு ஆகிய பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் போதிய அளவில் குடிநீர் வருவதில்லை என்பதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், ஒகேனக்கல் குடிநீர் குறைவாகவே இந்த கிராமங்களுக்கு வருகிறது.
இதனால், குழாயில் வரும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. எனவே, இப்பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கவும், இக்கிராமங்களிலுள்ள சாக்கடை கால்வாய்களை முறையாக சீரமைக்கவும், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21ல் பாலக்கோட்டில்
உள்ளூர் விடுமுறை
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு புதுார் மாரியம்மன் கோவில் திருவிழா வரும், 21ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம், பாலக்கோடு தாலுகாவிற்கு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், மார்ச், 16ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று, பாலக்கோடு சார்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகங்களை கவனிக்க, குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு இந்த அலுவலகங்கள் செயல்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இளம்பெண்கள் இருவர் மாயம்
காரிமங்கலம், சாமிகோவில் தெருவை சேர்ந்தவர் ரம்யா, 24; இவர், பழைய தர்மபுரி அருகே, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் ஜன., 28ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து, அவருடைய பெற்றோர் புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், தர்மபுரி, கோல்டன் தெருவை சேர்ந்தவர் சத்யா, 19; இவர், தர்மபுரி அருகே உள்ள தனியார் கல்லுாரியில், பயோ டெக்னாலஜி முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் முதல் அவரை காணவில்லை. அவரது பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில், ஆண்டுதோறும் ஜன., 15 முதல், பிப்., 14 வரை, சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, கண்காட்சி பஸ் மூலம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாணவர் போலீஸ் படையில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, போக்குவரத்து ஓட்டுனர் பயிற்சியாளர் மோகன்குமார் சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். பின், அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேசிய மூத்தோர் தடகள போட்டிகள்: வீரர்களை வழியனுப்பும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த டிச., மாதம் மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற, 94 வீரர், வீராங்கனைகள், திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற, 18 வீரர், வீராங்கனைகள், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் நாளை முதல், வரும், 17 வரை நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். அவர்களை, புனேவிற்கு வழியனுப்பும் விழா ஓசூரில் நடந்தது. மாவட்ட மூத்தோர் தடகள சங்க செயலாளர் ஜெபாஸ்டியன், ரோட்டரி தர்மேஷ்படேல் ஆகியோர், வீரர், வீராங்கனைகளுக்கு சீருடைகளை வழங்கி, தங்கப்பதக்கங்களை வென்று வர வாழ்த்தி வழியனுப்பினர்.
தேனீ வளர்ப்பு தொழில்: இலவச பயிற்சியில்
சேர அழைப்பு
தேனீ வளர்ப்பு குறித்து, இலவச பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள், இன்று முதல், நேரில் சேரலாம்.
இது குறித்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ஜகன்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும், கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கு பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போது, 10 நாட்கள் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி இன்று (பிப்.13) முதல் வழங்கப்பட உள்ளது. 8ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வரை உள்ள நபர்கள் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.
பயிற்சியில் சீருடை, உபகரணங்கள் மற்றும் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி, தொலைபேசி, 04343 240500, 94422 47921, 90806 76557 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி பி.டி.ஏ., தலைவர் கண்ணாமணி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிர்மலா தேவி, துணைத்தலைவர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார்.
உதவி ஆசிரியர் உமா ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் லோகேஷா, ராஜேந்திரன், வட்டார மேற்பார்வையாளர் வசந்தி, ஆசிரியர் பயிற்றுனர்கள் சண்முகம், ஜெயப்பிரகாஷ், ராஜசேகரி ஆகியோர் பேசினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில், ஆசிரியர்கள் சக்திவேல், சுபைதாபானு, ஷகிலா, சரண்யா, பாரதி, பானுமதி, சத்துணவு அமைப்பாளர் பழனி மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என, பலர் கலந்து கொண்டனர்.
எலத்தரிகிரி பாறைக்கோவில் தேர் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம், எலத்தகிரி கிராமத்திலுள்ள நுாற்றாண்டு பழமையான பாறைக்கோவில் எனப்படும் திருக்குடும்ப ஆலயத்தில், 120-ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த, 4-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் பாறைக்கோவிலில் திருப்பலி பூஜைகளும், ஆராதனைகளும் நடந்து வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. தேரை கிருஷ்ணகிரி வட்டார முதன்மைக்குரு இருதயநாதன் அடிகளார் துவக்கி வைத்தார். வண்ண மலர்களால் அலங்கரித்த, 3 தேர்களில், மில்கேல் சம்மனசு, லுார்து மாதா, புனித சூசையப்பர், குழந்தை இயேசு, தேவமாதா ஆகியோர் பவனியாக திருவீதி உலா சென்றனர். தேர் திருவிழா பவனியின்போது கண் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இந்த திருவிழாவில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
விழிப்புணர்வு பரிசோதனை முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணையிலுள்ள, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில், முழு உடல் பரிசோதனை முகாம் மற்றும் உலக தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. மகனுார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமில், சிங்காரப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பரசி, டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், தொழுநோய் குறித்து மருத்துவ பரிசோதனை மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமிலுள்ள மக்களுக்கு, முழு உடற் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கிராம செவிலியர்கள், நடமாடும் மருத்துவக் குழுவினர், பலர் கலந்து கொண்டனர்.