ADDED : பிப் 14, 2024 10:40 AM
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
ஊராட்சி சார்பில் மனு வழங்கல்
கடத்துார் பேரூராட்சியில் மின் வாரிய அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் அருகில் இரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. குடியிருப்பு, பள்ளி, கல்லுாரி பகுதியில் உள்ளதால் கடைகளை மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பேரூராட்சி எல்லையில் உள்ள ஓசஅள்ளி ஊராட்சி கடத்துார் -பெருமாள்கோவில்பட்டி ரோட்டில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் மூன்றாவதாக டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓசஅள்ளி ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கடை திறந்தால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவர். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி, ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் ஹரியண்ணன் மற்றும் ஊர் மக்கள், கடத்துார் பேரூராட்சி தலைவர் மணி, வி.ஏ.ஓ.,விடம் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என மனு அளித்தனர்.
வாக்காளர்களுக்கு மாதிரி
ஓட்டுப்பதிவு செயல் விளக்கம்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறை சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி தாளநத்தம் ஊராட்சியில் உள்ள வாக்காளர்களுக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுகளை செலுத்தி, வி.வி.பேட் மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு குறும்படம்
ஒளிபரப்பப்பட்டது.
தர்மபுரியில் மின்வாரிய
தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குழு அமைக்கவேண்டும். ஓய்வூதியர்கள், மின் ஊழியர்கள், மின் நுகர்வோர், பாதிப்புக்குள்ளாகின்ற வகையில் போடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தம் அரசாணை, 100 ஐ அரசு உத்திரவாதத்துடன் முறைபடுத்தவேண்டும். மறுபகிர்வு முறையை கைவிடவேண்டும். மின்வாரியத்தில் உள்ள, 56,000 காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர். சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜீவா, எம்ப்ளாயீஸ் பெடரேசன் மாவட்ட தலைவர் அருளாநந்தம், மாவட்ட செயலாளர் கோகுல்ராஸ், ஏ.ஐ.சி.சி.டி.யு., மாநில தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் சிவராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சி.ஐ.டி.யு., கடத்துார் கோட்ட செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.
ராகி கொள்முதல் செய்வதற்கு கால நீட்டிப்பு
தர்மபுரி கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதில், 2 கிலோ ராகி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், கடந்த டிச., 19 முதல் தர்மபுரி, பென்னாகரம், அரூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட கொள்முதல் மையம் மூலம், ராகி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
பிப்., வரை ராகி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து, தமிழக அரசு ஆகஸ்ட் வரை ராகி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே விவசாயிகள் இதை பயன்படுத்தி பயன் பெறலாம். ராகி கொள்முதல் மையத்தில் ஒரு கிலோ ராகி, 38.46 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் மையம் காலை, 9:30 முதல், 1:30 மணி வரையும், மாலை, 2:30 முதல், 6:30 மணி வரையும் செயல்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பைக் விபத்தில் தொழிலாளி பலி
பொம்மிடி அடுத்த பி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 34, கூலி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரும், இராமியம்பட்டிக்கு ஹீரோ ஹோண்டா சூப்பர் ஸ்பிளண்டர் பைக்கில் கூலி வேலைக்கு நேற்று முன்தினம் காலை சென்றனர். வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்காக மாலை, 5:30 மணியளவில் பைக்கை ஹெல்மெட் அணியாமல் கோவிந்தன் ஓட்டிக்கொண்டும், ரமேஷ் பின்னால் உட்கார்ந்து கொண்டு பொம்மிடி ரோட்டில்
சென்றனர்.
குண்டல்மடுவு வேடியப்பன் கோவில் அருகே சென்றபோது, முன்னால் சென்ற பஸ்சை முந்த முயன்றனர். அப்போது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, கோவிந்தன் பிரேக் போட்டதால் பைக் தடுமாறி கீழே விழுந்தது. இதில் ரமேஷ் பலத்த காயமடைந்தார்.
----கோவிந்தனுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.
உயர்கோபுர மின்விளக்கு திறப்பு
தர்மபுரி மாவட்டம், அரூரில் நான்குரோடு மற்றும் சேலம் பைபாஸ் சாலையில், நடேசா பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் தலா, 6.30 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் நேற்று துவக்கி வைத்தார். டவுன் பஞ்., தலைவர் இந்திராணி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல், கூக்கடப்பட்டியில் கட்டப்பட்ட நிழற்கூடத்தை எம்.பி., செந்தில்குமார் திறந்து வைத்தார்.
எஸ்.ஐ., பெயரில் போலி கணக்கு
துவங்கியவர் குறித்து விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் குட்டியப்பன். இவரது பெயரில் போலி பேஸ்புக் கணக்கை மர்மநபர் துவங்கியுள்ளார். அதில், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி மெசேஜ் போட்டுள்ளனர். அதில், ஒரு மொபைல் எண்ணை குறிப்பிட்டு இதில் பணம் அனுப்புமாறும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய சிலர், அந்த எண்ணிற்கு பணத்தை அனுப்பியுள்ளனர். சந்தேகமடைந்த எஸ்.ஐ., குட்டியப்பனின் நண்பர் அவரை தொடர்பு கொண்டபோது அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, போலி பேஸ்புக் கணக்கு மூலம் அனுப்பிய தகவல்களை குட்டியப்பன் எஸ்.ஐ., ஆய்வு செய்துள்ளார். இதையடுத்து தன் வாட்ஸ்ஆப் மற்றும் வலைதள பக்கங்கள் மூலம் நடந்த விவரங்களை கூறி, என் பெயரில் யாரும் பணம் கேட்டு தகவல் அனுப்பினால் பணம் அனுப்ப வேண்டாம் என மெசேஜை போட்டுள்ளார்.
போலி கணக்கு துவங்கிய மர்மநபர் குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காரை பைக் மீது மோதி
விபத்து; ஐந்து பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா, அத்திமரத்துாரை சேர்ந்தவர் செல்வம் மனைவி புஷ்பா, 25. இவர் தனது தம்பியான, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, பூனைகுண்டு காட்டுக்கோட்டையை சேர்ந்த சின்னதம்பி, 23, என்பவருடன் பத்திகவுண்டனுார் கிராமத்தில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க கடந்த, 11 மாலை பைக்கில் சென்றார். நாட்றாம்பாளையம் - ஒகேனக்கல் சாலையில், என்.புதுார் பாலம் அருகே சென்ற போது, அங்கிருந்த சிலர் போதையில் மாருதி காரை ஓட்டி வந்து, பைக் பின்னால் மோதினர்.
இதில் தலையில் படுகாயமடைந்த புஷ்பா, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, சின்னதம்பி கொடுத்த புகார்படி, ஜெகதீஷ்குமார், பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்த ஆகாஷ்குமார், 27, ஒயிட் பீல்டை சேர்ந்த ஜீவன், 27, கடபிசோஷஹள்ளியை சேர்ந்த ஸ்ரேயாஸ், 24, மஞ்சுநாதா லே அவுட்டை சேர்ந்த மஞ்சுநாத்ரெட்டி, 30, ஆகிய, 5 பேரை அஞ்செட்டி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தாலுகா அலுவலகத்தில்தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, சந்தனப்பள்ளி பஞ்., எஸ்.குருபட்டியை சேர்ந்தவர் அஸ்வதப்பா, 65, விவசாயி; இவரது குடும்பத்திற்கு சொந்தமான, 25 ஏக்கர் நிலத்தை அவரது உறவினர்கள் சிலர் போலியாக பத்திரப்பதிவு செய்து, பட்டா மாற்றம் செய்ய முயற்சி செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, பத்திரப்பதிவை ரத்து செய்வதுடன், பட்டா வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, அஸ்வதப்பா, அவரது மகன்களான நாகேஷ், 35, அனந்த், 20, ஆகியோர் நேற்று தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.ஐ., நாகபூஷணம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இரு தரப்பினர் மோதல்16 பேர் மீது வழக்கு
சூளகிரி அடுத்த மாதசனப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ், 33. இவரது சகோதரி ரூபா. இவருக்கும் மகராஜகடையை சேர்ந்த திருகுமரன் என்பவருக்கும், எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருகுமரன், திருப்பூரை சேர்ந்த பூஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து, ரூபாவின் சகோதரர் ரமேஷ் நேற்று முன்தினம் மகராஜகடை சென்று கேட்டார். அந்த நேரம் திருக்குமரனுக்கு ஆதரவாக சிலர் பேசி தகராறு செய்தனர். இதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இது குறித்து ரமேஷ் மற்றும் திருகுமரன் தரப்பினர் அளித்த புகார்படி இரு தரப்பை சேர்ந்த, 16 பேர் மீது மகாராஜகடை போலீசார்
வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
அறிவுசார் மையத்தில்ஓசூர் மேயர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில், மாநகராட்சி மூலதன மானிய நிதி மற்றும் பொது நிதியில் இருந்து, 2.75 கோடி ரூபாய் மதிப்பில், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இதை கடந்த மாதம், 5ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அறிவு சார் மையத்தில், மாநகர மேயர் சத்யா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வாசகர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார். மேலும், நுாலக ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம், உதவி பொறியாளர் வெங்கட்ராமப்பா, கவுன்சிலர் மோசின்தாஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மின்சாரம் பாய்ந்து
எலக்ட்ரீஷியன் பலி
நெல்லை மாவட்டம், நாங்குனேரி தாலுகா, வடக்கு விஜயநாராயணபுரத்தை சேர்ந்தவர் மகராஜன். இவரது மகன் இசக்கிராஜா, 23. இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செல்லபெண்டா என்ற பகுதியில், புதிதாக ஜல்லி நிறுவனம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அங்கு வேலை செய்வதற்காக, இசக்கிராஜா நேற்று முன்தினம் ஜல்லி நிறுவனத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே
பலியானார்.
பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலம் கட்ட பூமி பூஜை
தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அடுத்த ஜெக்கேரி பஞ்., கோட்டப்பன் கொட்டாய் கிராமத்திற்கு செல்ல வசதியாக, சனத்குமார் நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என, கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 45 லட்சம் ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணியை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் நாகராஜ், பஞ்., தலைவர் ராஜேஷ்குமார், கெலமங்கலம் பி.டி.ஓ., சாந்தலட்சுமி ஆகியோர், பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர்.
தே.மு.தி.க., சார்பில்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டியில், தே.மு.தி.க., கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். விஜயகாந்த் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வரும் லோக்சபா தேர்தலில் தலைமை கூட்டணி அமைக்கும் கட்சியுடன் இணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட அவைத் தலைவர் சின்னராஜ், ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் சங்கர், நகர கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பைக் மோதி முதியவர் பலிகிருஷ்ணகிரி தாலுகா, பையூர் அடுத்த மலைபையூரை சேர்ந்தவர் ஜெயவேல், 69. இவர் கடந்த, 12 காலை ஜெகதாப் அருகில், தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த யமஹா பைக் மோதியதில் ஜெயவேல் இறந்தார். விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபட்டில் இருந்து தவறி விழுந்து
கணவன் கண் எதிரே மனைவி பலி
கர்நாடகா மாநிலம், பெங்களூரு மங்கனபாலயா பகுதியை சேர்ந்தவர் சையத் இலியாஸ், 52. இவரது மனைவி ஷகிலா, 50.
இவர்களது மகள் திருமணத்திற்கு, ஓசூரில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்க கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் காலை, ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் வந்தனர். பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் பஸ் ஸ்டாப் அருகே காலை, 10:30 மணிக்கு சென்ற போது, பைக்கில் இருந்து இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் படுகாயமடைந்த சையத் இலியாஸ், ஷகிலா ஆகியோரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் ஷகிலா உயிரிழந்தார். ஓசூர் சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரிக்கிறார்.
விஷம் குடித்து மாணவி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, எக்கூர் காந்திநகரை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார், வீட்டு வேலை செய்யாததால், தாய் திட்டியதால் மாணவி விஷம் குடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட தடகள போட்டி
பி.எம்.சி., ஐ.டி.ஐ., மாணவர்கள் சாதனை
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு (ஐ.டி.ஐ.,) இடையேயான, மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தன. மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டிகளில், ஓசூர் பி.எம்.சி., டெக் ஐ.டி.ஐ., மாணவர்கள், 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல் மற்றும் வாலிபால் போட்டிகளில் முதலிடம் பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன் படத்தை வென்றனர்.
வெற்றி வெற்ற மாணவர்களை, பி.எம்.சி டெக் கல்வி நிறுவன தலைவர் குமார், செயலாளர் மலர், இயக்குனர் சுதாகரன், ஐ.டி.ஐ., முதல்வர் பாபு ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்கள் அப்ஸர் ஜான், நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

