ADDED : பிப் 15, 2024 10:50 AM
புழுதியூர் சந்தையில்
ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
அரூர் அடுத்த புழுதியூர் சந்தையில், 40 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 210 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 45,000 முதல், 73,000 ரூபாய் வரை விற்பனையானது.
அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 6,000 முதல், 29,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், 40 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
பொம்மிடி அடுத்த தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், கடத்துார் சுகாதார நிலையம் சார்பில், தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன் தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள், பரவும் விதம், சிகிச்சை கிடைக்கும் இடங்கள், இலவச சிகிச்சை போன்ற விபரங்கள் குறித்து மாணவ, மாணவியர் இடையே பேசினார். மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை செய்யப்பட்டது.
பேரணியில், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர்கள் பார்த்தீபன், விக்னேஷ், பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
உணவு பொருட்களில் கலப்படம்
செயல்விளக்க விழிப்புணர்வு
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் பஸ் ஸ்டாண்ட், இருமத்துார் சந்திப்பு, மொரப்பூர் ரோடு, தனியார் பள்ளி வளாகம், திப்பம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதி மற்றும் திருப்பத்துார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சேலம் ஆய்வக இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர், உணவு பாதுகாப்பு நடமாடும் வாகனம் மூலம், காணொலி காட்சிகள் மற்றும் உணவு கலப்படம் குறித்து, நேரடி செயல் விளக்கம் செய்து காட்டினர். மேலும், விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
மனைவியை சேர்த்து வைக்கக்கோரி
மொபைல் டவரில் ஏறி மிரட்டல்
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த வகுரப்பம்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 35; இவரது மனைவி பிரித்தா, 27; இவருக்கு, 3 வயதில் மகள் உள்ளார். தம்பதிக்குள் கருத்து வேறுபாடால், 5 ஆண்டுகளாக பிரிந்து உள்ளனர். சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்டது. நேற்று காலை, 7:45 மணிக்கு வகுரப்பம்பட்டியில், 150 அடி உயர பி.எஸ்.என்.எல்., டவரில் ஏறிய பிரபு, தன்னுடன் மனைவியை சேர்த்து வைக்க வேண்டும், இல்லையெனில் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என, மிரட்டல் விடுத்துள்ளார்.
அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த கம்பைநல்லுார் இன்ஸ்பெக்டர் காளியப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, காலை, 10:00 மணிக்கு அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மேலே ஏறி, பிரபுவை பாதுகாப்பாக மீட்டனர். பின், அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பள்ளி மாணவர்களுக்கு
விலையில்லா சைக்கிள்
தர்மபுரி அடுத்த, அதகபாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அதகபாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
பஞ்., தலைவர் பசுவராஜ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பி.ஏ.சி.எல்., நிறுவன முதலீட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்
முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை வழங்க வலியுறுத்தி, பி.ஏ.சி.எல்., நிறுவன முதலீட்டாளர்கள் கோரிக்கை மனு அளிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் முன், நேற்று பி.ஏ.சி.எல்., நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கோரிக்கை மனு அளிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பொறுப்பாளர் ராணி தலைமை வகித்தார். இதில், மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பி.ஏ.சி.எல்., முதலீட்டாளர்களுக்கு நிபந்தனையின்றி முதிர்வு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். செபி நிர்வாகம் மண்டல அளவில் அலுவலகம் திறக்க வேண்டும். ஆர்.எம்.லோதா கமிட்டி உறுப்பினர் நீதிபதி மகாலிங்கம் அவர்களிடம் கொடுத்த மனு மீதும், கடந்தாண்டு அக்., 4ல் மும்பை செபி நோடல் அதிகாரியிடம் கொடுத்த மனு மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு, பருத்திகொட்டை பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்தது. லாரியை புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த கலைச்செல்வன், 45, என்பவர் ஓட்டி வந்தார். லாரி தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்ற வேன் மற்றும் சென்டர் மீடியனில் மோதி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், லாரி டிரைவர் மற்றும் வேனில் வந்த மொத்தம், 4 பேர் லேசான காயங்களுடன் விபத்தில் சிக்கினர். தொப்பூர் போலீசார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி ரோந்து படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் தர்மபுரி- - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளர் நலவாரிய ஆபீசில்
சிறப்பு உதவி மையம் அமைப்பு
சர்வர் பழுதால், இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை, மீண்டும் பதிவேற்றம் செய்யும் பொருட்டு, மனுதாரர்களுக்கு சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தர்மபுரி, தொழிலாளர் உதவி ஆணையர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பான, 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில், விண்ணப்பங்கள் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விண்ணப்பங்களும், www.tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறை இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. தற்போது, சர்வர் பழுதால், இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை, மீண்டும் பதிவேற்றம் செய்யும் பொருட்டு, மனுதாரர்களுக்கு திருப்பப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும், 2023 ஆண்டு, டிச.,2, டி-ற்கு முன்பாக, விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையிலுள்ள, விண்ணப்பங்கள் மற்றும் கேட்பு மனுக்களுக்கு, உரிய ஆவணங்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்ய ஏதுவாக தர்மபுரி, தொழிலாளர் உதவி ஆணையர், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில், சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
திருநங்கையருக்கான குறைதீர் கூட்டம்
ஓசூரில், 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் தலைமையில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், அவர் பேசும் போது, ''போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், திருநங்கைகள் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர். எனவே சிலர், பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறாக பிச்சை எடுப்பதையும், தவறான பழக்க வழக்கம் மற்றும் திருட்டு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதை கைவிட வேண்டும். தங்களுக்கு ஏதாவது வங்கி கடனுதவி, சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகள் தேவைப்பட்டால், தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். வாழ்வாதாரத்திற்கு உதவிகள் செய்யப்படும்,'' என்றார்.
ஓசூர், டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருப்பதிக்கு
12 டன் காய்கறி
திருமலை திருப்பதியில், சூரியனின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் ரதசப்தமியை, தேவஸ்தானம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ரதசப்தமி நாளை (பிப்.16) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருமலை திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்வர்.
அவ்வாறு வரும் பக்தர்களில், 6 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 12 டன் காய்கறிகள் நேற்று லாரியில் ஏற்றி, திருலை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதற்காக, திருமலை திருப்பதி கோவிலில் இருந்தே லாரி வரவழைக்கப்பட்டிருந்தது. முன்னதாக, காய்கறிகளை ஏற்றிச்சென்ற லாரிக்கு, பூஜை செய்யப்பட்டது.
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்
வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி
புல்வாமா தாக்குதலின், 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடந்த, 2019, பிப்., 14, மதியம், 3:15 மணிக்கு காஷ்மீரில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற கான்வாய் மீது சொகுசு காரில் வந்த தற்கொலை படை பயங்கரவாதிகள் மோதி, வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதன், 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் முன்னாள் மத்திய ஆயுத காவல் படை சங்கம் சார்பில், புல்வாமா தாக்குதல், 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வீர மரணம் அடைந்த, 40 சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உருவ படத்திற்கு, மாவட்ட கலெக்டர் சரயு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஊர்காவல் படைக்கு தேர்வான
222 பேருக்கு ஓட்ட பந்தயம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 31 ஊர்காவல் படை பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் ஊர்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு, கிருஷ்ணகிரி ஆயுதப்படை மைதானத்தில் கடந்த, 12ல் நடந்தது. இதில், கலந்து கொண்ட 272 பேரில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம், எடை உள்ளிட்ட உடல் தகுதிகளுக்கு பின், 222 பேர் தேர்வாகினர். இவர்களுக்கு நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட விளை யாட்டு மைதானத்தில், 400 மீ., ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதில் இறுதிசெய்யப்பட்ட, 31 பேர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என போலீசார் கூறினர்.
நேற்று நடந்த ஊர்காவல் படையினருக்கான ஓட்ட பந்த யத்தை ஊர் காவல்படை, சேலம் சரக உதவி தளபதி மகா அஜய் பிரசாத் துவக்கி வைத்தார். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையில் ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் ஆயதப்படை டி.எஸ்.பி., கணேசன், ஊர் காவல் படை இன்ஸ்பெக்டர் செல்வ மணி எஸ்.ஐ., செந்தில் மற்றும் போலீசார் நடத்தினர்.
ரூ.42.98 லட்சம் நலத்திட்ட உதவி
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த சென்னசந்திரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசுகையில், ''தற்போது நடந்த முகாமில், 187 மனுக்கள் வந்துள்ளது. இதில், தகுதி வாய்ந்த நபர்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தொடர்ந்து வருவாய் துறை சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில், 169 பேருக்கு, 42.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆர்.டி.ஓ., பாபு, ஒன்றியக் குழு தலைவர் சரோஜினி பரசுராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு மாதம்
விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., தமிழரசி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, பழையபேட்டை வழியாக, கிருஷ்ணகிரி முக்கிய வீதிகளில் சென்றது. இதில், கல்லுாரி மாணவியர், 100க்கும் மேற்பட்டோர் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
சீட் பெல்ட் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில், 4 சக்கர வாகன பேரணியில், வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன அலுவலர்கள் ஆனந்தன், அன்புச்செழியன், ஓட்டுனர் பயிற்சி பள்ளி வாகனங்களுடன் பயிற்சியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர் மாநகராட்சியை கண்டித்து
பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் கிழக்கு பகுதி மாநகர, பா.ஜ., கட்சி சார்பில், ராம்நகரில், ஓசூர் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஓசூர் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், சாலை வசதி, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். கோடைக்காலம் துவங்கும் முன்பே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றை நிவர்த்தி செய்ய தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், பொதுச்செயலாளர் விஜயகுமார், மாநில தொழில்துறை பிரிவு செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் முருகன், பொருளாளர் சீனிவாசன், ஓய்வு எஸ்.ஐ., குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ரூ.55 லட்சம் மதிப்பில்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
கிருஷ்ணகிரி, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 55 லட்சம் ரூபாய் மதிப்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், பெத்ததாளாப்பள்ளி பஞ்., ஆனந்த் நகர், கெலமங்கலம் கருக்கனஹள்ளி பஞ்., தக்காளி மார்க்கெட், கிருஷ்ணகிரி அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் கல்லுாரி விடுதி மற்றும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என, 5 இடங்களில், நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை, காங்., - எம்.பி., செல்லக்குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும், 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நவீன குடிநீர் நிலையம் திறக்கப்பட்டுள்ளன. ஒரு ரூபாய்க்கு, ஒரு லிட்டர் குடிநீரும், 5 ரூபாய்க்கு, 20 லிட்டர் குடிநீரும் தானியங்கி இயந்திரம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல், நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத்தலைவர் சேகர், முன்னாள் அகில இந்திய காங்., உறுப்பினர் துரைசாமி, நகர தலைவர் முபாரக் உள்பட பலர் பங்கேற்றனர்.
உயரமாக அமைத்த தார்ச்சாலையால்
அதிகரிக்கும் விபத்து; மக்கள் அச்சம்
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது. இச்சாலையில், பாளையம் சுங்கச்சாவடி மற்றும் தொப்பூர் கணவாய், இரட்டை பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதில், பைக்கில் செல்பவர்கள், அதிகளவில் விபத்தில் சிக்கி இறக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். அந்த பகுதியை தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன் நேற்று பார்வையிட்டார்.
கடந்த சில வாரங்களாக, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சாலை புதுப்பிக்கும் பணி நடந்தது. அப்போது போடப்பட்ட, தார்ச்சாலை உயரமாகவும், அதையொட்டிய சாலையோர மண் பகுதி பள்ளமாகவும் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலின் போது, தார்ச்சாலையிலிருந்து கீழே இறங்கும் டூவீலர் வாகன ஓட்டிகள், மீண்டும் தார்ச்சாலைக்கு செல்ல உயரமான தார்ச்சாலையில் ஏற முயற்சிக்கும் போது, தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர் என்பது தெரியவந்தது. இது குறித்து, மாவட்ட கலெக்டரின் பார்வைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என, டி.எஸ்.பி., சிவராமன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, தொப்பூர் எஸ்.ஐ., சரவணன், டிராபிக் எஸ்.ஐ., சின்னசாமி உடனிருந்தனர்.

