sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : பிப் 16, 2024 09:57 AM

Google News

ADDED : பிப் 16, 2024 09:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

52 மாணவ, மாணவியருக்கு

ரூ.4.97 கோடி கல்விக்கடன்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய கல்விக்கடன் முகாமை, மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார். இதில், 52 மாணவ, மாணவியருக்கு, 4.97 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக் கடனுக்கான காசோலையை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், இந்தியன் வங்கி மண்டல துணை பொது மேலாளர் பிரேந்திரகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவில் கும்பாபிஷேகவிழா அழைப்பிதழ்

ஓசூர் அருகே பாகலுாரில் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 17ல் துவங்கி, 19 வரை நடக்க உள்ளது. இதையொட்டி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், பாகலுார் பஞ்., தலைவர் ஜெயராம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கோவில் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள், கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுதேன்கனிக்கோட்டை குருகுலம் குலோபல் ரெசிடென்சியல் பள்ளி, ஓசூர் ரோட்டரி கிளப், ஆகியோர், கெலமங்கலம் போலீசாருடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். ஓசூர் வட்ட ரோட்டரி கிளப் தலைவர் ஜோகராஜ், குருகுலம் பள்ளி தாளாளர் நரசி ரெட்டி, பள்ளி முதல்வர் காயத்ரி, ஆகியோர் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

எரிந்த நிலையில்வாலிபர் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நெல்லுமார் அடுத்த ஜாகீர் பிளாட்டில், 25 முதல், 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடந்துள்ளது. தளி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். அந்த வாலிபர் யார் என தெரியவில்லை. கர்நாடக மாநில எல்லையை ஒட்டிய பகுதி என்பதால், அங்கு கொலை செய்து, சடலத்தை இங்கு கொண்டு வந்து எரித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு பிரசாதம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் வெற்றி பெற வேண்டி, ஓசூர் மாநகராட்சி விகாஷ் நகர் பகுதியிலுள்ள வித்யாகணபதி கோவிலில் ‍நேற்று ஹோமம் வளர்க்கப்பட்டது. யாக பூஜையை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தேர்வு எழுத வேண்டிய கல்வி உபகரணங்களுக்கு பூஜை செய்து அதை, 100 மாணவ, மாணவியருக்கு பிரசாதமாக வழங்கினர்.

6 பவுன் நகை கொள்ளை

நல்லம்பள்ளி அடுத்த சேசம்பட்டியை சேர்ந்தவர் ரேவதி, 32; விவசாய கூலிதொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ஓசூரிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவிலிருந்த, 6 பவுன் நகைகள், 25,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து ரேவதி புகார்படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

துாய்மை பணியாளர் சாவுஅரூர் அடுத்த நரிப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 39; துாய்மை பணியாளர்; இவர் நேற்று முன்தினம் மாலை, 5:45 மணிக்கு, தெத்தேரியில் இருந்து சிக்கலுார் செல்லும் சாலையில், முல்லை நகர் பஸ் ஸ்டாப்பிலுள்ள சிறிய பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, தவறி விழுந்ததில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் வாலிபர் உயிரிழப்புஊத்தங்கரை அடுத்த, வீரப்பன் கொட்டாயை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் தமிழரசன், 25; நேற்று முன்தினம் நள்ளிரவு சேலம் - ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்தார். அப்போது, தண்ணீர் பந்தல் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

நரசிபுரத்தில் எருது விடும் விழா

சூளகிரி அடுத்த நரசிபுரம் கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. கிருஷ்ணகிரி, சூளகிரி மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., பொருளாளர் நாராயணப்பா தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்தார்.

இந்த பாரம்பரிய எருதாட்ட விழாவில் தமிழகத்தில் ஓசூர் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, பாகலுார், பேரிகை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும், 500க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.

வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் கொம்புகளில் வண்ண தோரணங்கள் மற்றும் தடுக்குகளை கட்டப்பட்டு கூட்டத்தில் சீறிப்பாய்ந்தன.

எருதுவிடும் விழாவில், சூளகிரி ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் அண்டை மாநிலங்களில் இருந்து, 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சூளகிரி போலீசார் செய்திருந்தனர்.

ஓசூர் மாநகர தி.மு.க.,

செயற்குழு கூட்டம்

ஓசூர் மாநகர, தி.மு.க., செயற்குழு கூட்டம் பகுதி செயலாளர்கள் தலைமையில் நேற்று நடந்தது. மாநகர, தி.மு.க., செயலாளரும் மாநகராட்சி மேயருமான சத்யா பேசுகையில், ''வரும், 17ல், கிருஷ்ணகிரியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கும், 'உரிமைகளை மீட்க, ஸ்டாலினின் குரல்' என்ற பொதுக்

கூட்டத்தில், ஓசூர் மாநகரத்திற்கு உட்பட்ட பகுதி நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்,'' என்றார். மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார், துணைச்செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார், சாந்தி, பகுதி செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கற்கள் கடத்திய

லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி துணை தாசில்தார் கோகுல கண்ணன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் மூங்கில்புதுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில், 2 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அதிகாரி கோகுல கண்ணன் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

தடுப்பூசி முகாம்

தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், 4 முதல், 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு பெறப்பட்ட, 60,000 டோஸ் கருச்சிதைவு நோய் தடுப்பூசி போடும் முகாம் முதல் மற்றும் 2ம் சுற்றுகளில் 41,680 கிடேரி கன்றுகளுக்கு போடப்பட்டது. 3வது சுற்றுக்கான தடுப்பூசி திட்ட தொடக்க முகாம், நேற்று பர்கூர் ஒன்றியம் பாலேப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ராயப்பனுாரில் துவங்கியது. கிருஷ்ணகிரி மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். இதில், 30க்கும் மேற்பட்ட கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டம் முழுவதும், 800 கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாம் தொடர்ந்து ஒரு மாதம் நடக்கிறது.

இலவச வீட்டுமனை பட்டா கோரி

நெசவாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா கோரி, ஓசூரில், நெசவாளர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் நெசவுத்தெருவில் உள்ள சங்க அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் தொழிற்சங்க தலைவரும், மேற்கு மாவட்ட, தி.மு.க. நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான சண்முகம் தலைமை வகித்தார்.

செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர், சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: ஓசூரில், 100-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நெசவாளர்கள் போராடி வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு

வந்தவுடன் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி தரப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. எம்.எல்.ஏ., மேயர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், யாரும் செவி சாய்க்கவில்லை.

தவிர, தற்போது நெசவுத்தொழில் நலிந்து விட்டதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர் நலனுக்காக தீட்டப்படும் திட்டங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தடைவதில்லை. இதில் யாரும் அக்கறையும் காட்டுவதில்லை.

எனவே, நாங்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர், எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

3 வி.ஏ.ஓ.,க்கள் இடமாற்றம்

பாப்பிரெட்டிப்பட்டி யில், 3 வி.ஏ.ஓ.,க்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, பொம்மிடியில் பணியாற்றி வந்த ஹரிநாராயணன் மோட்டாங்குறிச்சிக்கும், அங்கு பணியாற்றி வந்த இளங்கோ பையர்நத்தம் கிராமத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த சுமதி, பொம்மிடி கிராமத்திற்கும் பணியிட மாற்றம் செய்து, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள், உடனடியாக பணியில் சேர

அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரூ.5.25 கோடி கல்விக்கடன் வழங்கல்

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில், 5.25 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி ரோட்டரி ஹாலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் விழா நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் மட்டும், 11,625 மாணவர்களுக்கு, 261.90 கோடி ரூபாய் வங்கி மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜன., 31 வரை, 740 மாணவர்கள் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 477 மாணவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ள, 150 விண்ணப்பதாரர்களுக்கு, பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வங்கியில், 113 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. மாணவர்களின் முன்னேற்றத்திற்க்கும், அவர்களின் குடும்ப பொருளாதார வளர்ச்சி அடையவும், தமிழக அரசு கல்விக்கடனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.

இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில் அவர், 48 மாணவர்களுக்கு, 5.25 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக்கடன் வழங்கினார். இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பத்மாவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன், தொழில் மைய நிதி ஆலோசகர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடிநீர் குழாய் உடைப்பு

பொதுமக்கள் போராட்டம்

தர்மபுரி அருகே, குடிநீர் குழாயை உடைத்த மர்ம நபர்கள் மீது, நடவடிக்கை கோரி பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட போயர் கொட்டாய், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதியில், 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக பாலஜங்கமனஹள்ளி பஞ்., நிர்வாகத்தின் சார்பில் மேல்நிலை நீர் தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம், 25 ஆண்டுகளாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மர்ம கும்பல் ஒன்று, குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

மேலும், அவற்றை சீரமைக்க முடியாதபடி கற்களை கொண்டு மூடியுள்ளனர். இதனால், இப்பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைவரும், நீர் வினியோகம் தடை பட்டதால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, குடிநீர் குழாய் உடைக்கப்பட்ட இடத்தில், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் குழாயை உடைத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, கோஷமிட்டனர்.

இலக்கிய திருவிழா போட்டிகள்

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

நுாலகத்துறை சார்பில் நடத்தப்பட்ட, இலக்கிய திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை சார்பில், அடுத்த வாரம் கோவையில் இலக்கிய திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி, தர்மபுரி நல்லானுாரில் உள்ள தனியார் கல்லுாரியில், தமிழ் இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், இரண்டு நிமிட பேச்சாற்றல், நுால் அறிமுகம், விவாத மேடை, இலக்கிய வினாடி, வினா, ஆறு நிமிட பேச்சு, ஓவியப்போட்டி, ஆங்கில நுால் திறனாய்வு, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துதல் உள்ளிட்ட பலவேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

தர்மபுரி அடுத்த பள்ளப்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி தலைமை வகித்தார். நுாலகர் சரவணன் வரவேற்றார். இதில், மாணவர்கள் புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்து, அவர்களுக்கு விளக்கப்பட்டது. தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன், தர்மபுரி மாவட்ட தமிழ்க்கவிஞர் மன்ற தலைவர் பாவலர் மலர்வண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மருந்தகங்களில் தீவனம்

வழங்க வலியுறுத்தல்

அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: இதனால், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலம் துவங்கும் முன்பே, வறட்சி நிலவி வருவதால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, கடந்த காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில், வறட்சி நிவாரண திட்டத்தில், மொரப்பூர், அரூர், மோளையானுார், புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட, 12 இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களில், விற்பனை கிடங்கு அமைக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலம், மானிய விலையில் உலர் தீவனமாக வைக்கோல் வழங்கப்பட்டு வந்தது.

வறட்சி நிலை சீராகும் வரை ஒரு கால்நடைக்கு நாள் ஒன்றுக்கு, 3 கிலோ வீதம் அதிகபட்சம், 5 கால்நடைகளுக்கு வாரத்திற்கு, 150 கிலோ வரை கால்நடை வளர்ப்போர் ஒருவருக்கு, உலர் தீவனம் மானிய விலையில் கிலோ ஒன்று, 2 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. எனவே, கால்நடை வளர்ப்போர் நலன் மற்றும் அவர்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் மீண்டும், உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ரூ.9 லட்சத்தில்

கழிவுநீர் கால்வாய்

தர்மபுரி மாவட்டம் கடத்துார் ஒன்றியம் சுங்கரஹள்ளி ஊராட்சியில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்க, ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஜெகநாதன், துணைத்தலைவர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குழாய் பதிக்க தோண்டிய சாலைகள்

சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,ல், திரு.வி.க., நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வீடுகளுக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக, சாலை நடுவே குழி தோண்டப் பட்டது. பணிகள் முடிவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை.

இதனால், சாலை குண்டும் குழியுமாக, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவதுடன், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தோண்டிய சாலையை சீரமைக்க, இதுவரை டவுன் பஞ்., நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீர்

சாலையில் வழிந்‍தோடும் சாக்கடை கழிவுநீரால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தர்மபுரி, நகராட்சிக்கு உட்பட்ட சின்னசாமி நாயுடு தொருவில், ஜவுளி, மளிகை, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழியின்றி, கால்வாயிலிருந்து வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், கடும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், கடைக்காரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல நாட்களாக சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீரால், பாதாள சாக்கடை கால்வாயை சீரமைக்கக்கோரி அப்பகுதியினர், நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கையில்லை. சாலையில் சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றி கால்வாயை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us