/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடியிருப்பு பகுதிகளை ஒட்டி மயானம் வேண்டாம்
/
குடியிருப்பு பகுதிகளை ஒட்டி மயானம் வேண்டாம்
ADDED : டிச 14, 2024 01:34 AM
ஓசூர், டிச. 14-
ஓசூரில், குடியிருப்பு பகுதிகளை ஒட்டி மின் மயானம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஓசூர் மாநகராட்சி, 29வது வார்டுக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில், மின் மயானம் அமைக்கப்படுகிறது. இதனால் முல்லை நகர், சானசந்திரம், திரு.வி.க., நகர், வ.உ.சி., நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, மின் மயான பணிகள் துவங்கிய நாள் முதல், அப்
பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின் மயானத்தை சுற்றி, அரசு பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்புகள், கோவில் உள்ளதால் மின் மயானத்தை மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், ஓசூர் அலசநத்தம் பிரிவு ரோட்டில் உள்ள மின் மயானம், இப்பகுதிகளில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் தான் உள்ளது. அந்த மயானத்தையே, முல்லை நகர், சானசந்திரம், திரு.வி.க., நகர், வ.உ.சி., நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்வர்.
எனவே, ஓசூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைய உள்ள, ஒன்பது பஞ்.,ல், ஏதாவது ஒரு இடத்தில் மின்
மயானம் அமைத்தால், வரும் காலங்களில் உதவியாக இருக்கும். எனவே, முல்லை நகர் மின் மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கூடாது. 45 வார்டு மக்களும் பயன்படுத்தும் வகையில் பொதுவான இடத்தில் மயானம் அமைக்க வேண்டும் என கூறி, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், செயலாளர் பிரவீன், துணைத்தலைவர் முருகன், முல்லை நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜெயசந்திரன், துணைத்தலைவர் குழைக்காதன் மற்றும் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்திடம் மனு கொடுத்தனர்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மக்கள், அங்கு வந்த மேயர் சத்யாவிடம், மின் மயானம் வேண்டாம் என கூறி, அவரை சூழ்ந்து கொண்டு முறையிட்டனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து சென்றார்.