/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரும் 10ல் நம்பிக்கையில்லா தீர்மானம்: கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் 'அட்மிட்' : தி.மு.க., கவுன்சிலர்கள் ஊட்டிக்கு இன்ப சுற்றுலா

ADDED : நவ 07, 2025 11:56 PM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது, தி.மு.க., கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், வரும் 10ல் ஓட்டெடுப்பு நடக்கிறது.
இந்நிலையில், யாரும் மனம் மாறிவிடக் கூடாது என்பதற்காக, கவுன்சிலர்கள் ஊட்டிக்கு இன்ப சுற்றுலா செல்ல, தலைவரோ பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.
கிருஷ்ணகிரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. தி.மு.க., - 25; காங்., - 1; அ.தி.மு.க., - 6; பா.ஜ., - 1 இடங்களில் வெற்றி பெற்றன.
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதாநவாப் நகராட்சி தலைவராக உள்ளார்.
தி.மு.க., மாவட்ட துணை செயலர் சாவித்திரி துணை தலைவராக உள்ளார். பல மாதங்களாக நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
தி.மு.க., கவுன்சிலர்கள் 23 பேர், நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி, கமிஷனர் சதீஷ்குமாரிடம் அக்., 16ல் மனு அளித்தனர்.
அதன்படி, நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை மறுநாள் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட பரிதா நவாப், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இதனிடையே, தி.மு.க., கவுன்சிலர்கள் 20 பேர், நேற்று முன்தினம் இரவு ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்கள் ஓட்டெடுப்பு நாளான 10ம் தேதி காலை, கிருஷ்ணகிரி வருவர் என தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், 'கிருஷ்ணகிரியில் நாங்கள் இருந்தால், எங்கள் மனதை மாற்ற, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் முயற்சி செய்வர். அதனால் தான் ஊட்டி வந்துள்ளோம்' என்றார்.