/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இயற்கை விவசாயம் நீர் மேலாண்மை பயிற்சி
/
இயற்கை விவசாயம் நீர் மேலாண்மை பயிற்சி
ADDED : செப் 13, 2024 07:04 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த, வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் அட்மா திட்டத்தில், பயறு வகைப்பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் கோடைபருவத்தில் நீர் மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சி நேற்று நடந்தது. ஊத்தங்கரை வட்டார வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா பயிற்சியை துவக்கி வைத்து, பயறு வகை சாகுபடி முறைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறைகள் குறித்து விளக்கினார். விளக்கு பொறி, மஞ்சள் வண்ண அட்டை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கினார். 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்க விழாவிற்கு, விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
வேளாண் அலுவலர் ஆர்த்தி, நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும், துவரை சாகுபடிக்கான மானிய திட்டங்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும் இடுபொருட்கள் குறித்து விளக்கினார். படப்பள்ளி கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி வெங்கடாசலம், மத்துார் வட்டார பாரம்பரிய விவசாயிகள் உற்பத்தியாளர் குழுவின் தலைவி கிரிஜா ஆகியோர், இயற்கை விவசாயம் பற்றி விளக்கினர்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி ஆகியோர், இயற்கை இடுப்பொருள் தயாரித்து பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.