/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தண்ணீர் தேங்கும் இடங்களில் வீடுகள் கட்டுவதை மக்கள் தவிர்க்க அறிவுறுத்தல்
/
தண்ணீர் தேங்கும் இடங்களில் வீடுகள் கட்டுவதை மக்கள் தவிர்க்க அறிவுறுத்தல்
தண்ணீர் தேங்கும் இடங்களில் வீடுகள் கட்டுவதை மக்கள் தவிர்க்க அறிவுறுத்தல்
தண்ணீர் தேங்கும் இடங்களில் வீடுகள் கட்டுவதை மக்கள் தவிர்க்க அறிவுறுத்தல்
ADDED : டிச 12, 2024 01:18 AM
ஓசூர், டிச. 12-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அருகே பச்சப்பனட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. தாசில்தார் கோகுல்நாத் வரவேற்றார். கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகள் சார்பில், 54.69 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, 111 பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது:
நீர்நிலைகள் மற்றும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் வீடுகள் கட்டுவதை, மக்கள் தவிர்க்க வேண்டும். ஓசூர், கெலமங்கலம், தளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில், பள்ளிக்கல்வித்துறையில் தேர்ச்சி சதவீதம் மொழிப்பாட திட்டங்களில் குறைவாக உள்ளது. பள்ளி குழந்தைகள் சரியான முறையில் பள்ளிக்கு வருகை புரிந்து, மொழிப்பாட திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பினால் தான், கல்வி கற்று நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தையும், சமுதாயத்தையும் உயர்த்த முடியும். குழந்தைகள் படிப்புகளை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என, ஸ்கேன் செய்து தெரிந்து கொள்வது குற்றம். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இளம் வயது திருமணத்தை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால், மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. வீடு, சுற்றுப்புறத்தை மக்கள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

