/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காப்புக் காட்டில் முகாமிட்ட யானைகளால் மக்கள் பீதி
/
காப்புக் காட்டில் முகாமிட்ட யானைகளால் மக்கள் பீதி
ADDED : ஜன 19, 2024 11:47 PM
ஓசூர்:கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டத்தில், 15க்கும் மேற்பட்டவை, ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்தன. இரு நாட்களுக்கு முன், வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள் கூட்டம் சானமாவு காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்தன. ஓசூர் வனத்துறையினர், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள், சானமாவு கிராமத்திற்குள் புகுந்து, அங்கிருந்த வாழை தோட்டங்களை நாசம் செய்தன. நேற்று அதிகாலை நேரம் வனப்பகுதிக்கு திரும்பி சென்றன. வாழைகள் நாசமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு யானைகளை விரட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல, ஓசூர் வனச்சரகம், போடூர்பள்ளம் வனப்பகுதியில் தனியாக உள்ள ஒற்றை யானை, காப்புக்காட்டை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருவதால், அதையும் கூட்டத்துடன் இணைத்து விரட்ட வேண்டும் என, மக்கள் பீதியுடன் வலியுறுத்தியுள்ளனர்.