/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரயில்வே ஸ்டேஷன் அருகே வழியின்றி தவிக்கும் மக்கள் மேம்பாலம் அமைக்காமல் இழுத்தடிக்கும் ரயில்வே
/
ரயில்வே ஸ்டேஷன் அருகே வழியின்றி தவிக்கும் மக்கள் மேம்பாலம் அமைக்காமல் இழுத்தடிக்கும் ரயில்வே
ரயில்வே ஸ்டேஷன் அருகே வழியின்றி தவிக்கும் மக்கள் மேம்பாலம் அமைக்காமல் இழுத்தடிக்கும் ரயில்வே
ரயில்வே ஸ்டேஷன் அருகே வழியின்றி தவிக்கும் மக்கள் மேம்பாலம் அமைக்காமல் இழுத்தடிக்கும் ரயில்வே
ADDED : ஜூன் 04, 2025 01:11 AM
ஓசூர், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வசிக்கும் மக்கள், அணுகுபாதையின்றி தவித்து வரும் நிலையில், தென்மேற்கு ரயில்வே நிர்வாகம், பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஜனகபுரி லே அவுட், பசுமை நகர், கயிலை நகர், நந்தவனம், கோபிகிருஷ்ணா லே அவுட் போன்ற பகுதிகள் உள்ளன. இங்கு பல ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த, 20 ஆண்டுக்கு முன்பு வரை, ரயில்வே ஸ்டேஷன் அருகே இருந்த ரயில்வே கேட் வழியாக, மக்கள் இப்பகுதிக்கு சென்று வந்தனர். ஆனால், ரயில்வே கேட்டை அகற்றி, அவ்வழியாக செல்ல முடியாத அளவிற்கு ரயில்வே நிர்வாகம் தடுப்பை ஏற்படுத்தி விட்டது. அதனால், 3 கி.மீ., துாரத்திற்கு மேல், கோகுல் நகர் வழியாக மக்கள் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வந்து செல்ல, சிரமம் ஏற்பட்டு, மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால், தென்மேற்கு ரயில்வே நிர்வாகம், மேம்பாலம் அமைத்து கொடுக்காமல், இழுத்தடித்து வருகிறது.
இந்நிலையில், ஓசூர் ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்து, கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி மற்றும் சரக்குகளை இறக்க, லாரிகள் வந்து செல்ல, சாலை அமைக்கும் பணிகளை, ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தற்போது, தற்காலிகமாக இந்த வழியில் இருசக்கர வாகனம், ஆட்டோ போன்றவை செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. புதிதாக அமைக்கப்படும் பிளாட்பாரங்கள் பயன்பாட்டிற்கு வந்து, ரயில்கள் வந்து செல்ல துவங்கினால், அவ்வழியாக மக்கள் செல்ல முடியாது. அதனால், உயர்மட்ட பாலம் அமைக்க, தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத்திடம் கேட்டபோது, ''சுரங்கப்பாதை அமைத்தால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடும். அதனால், ரயில்வே லைனுக்கு மேலே உயர்மட்ட பாலம் அமைக்க, ரயில்வே அதிகாரிகளிடம் திட்ட மதிப்பீடு கேட்டுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன் மேம்பாலம் அமைக்க, முயற்சி மேற்கொண்டுள்ளோம்,'' என்றார்.