/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சீட்டு நடத்தி ரூ.3 கோடி சுருட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் முற்றுகை
/
சீட்டு நடத்தி ரூ.3 கோடி சுருட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் முற்றுகை
சீட்டு நடத்தி ரூ.3 கோடி சுருட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் முற்றுகை
சீட்டு நடத்தி ரூ.3 கோடி சுருட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் முற்றுகை
ADDED : நவ 08, 2024 07:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சீட்டு நடத்தி, 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதியக்கோரி, ஓசூர், முக்கண்டப்பள்ளி பூஜையம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: ஓசூரை அடுத்த மூக்கண்டப்பள்ளி, பூஜையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் தன் மனைவி குமாரி, மகள் உஷா, மகன் விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து, 20 ஆண்டுகளாக, 5 லட்சம், 3 லட்சம், 2 லட்சம் ரூபாய், தீபாவளி பட்டாசு, மகளிர் குழு என பல்வேறு பிரிவுகளில் ஏலச்சீட்டு நடத்தினார். இதில் அப்பகுதிகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்டோர் சீட்டுப்பணம் கட்டி வந்தோம். பல மாதங்களாக சீட்டு எடுத்த பலருக்கும் பணம் தராத நிலையில் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். எங்கள் பகுதியில் மக்களிடம் மட்டும், 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து கடந்த செப்.,5ல், கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தும் அவர்கள் மீது வழக்கு பதியவில்லை.
ஜார்ஜூக்கு சொந்தமான வீடு, பூஜையம்மன் கோவில் தெருவில் உள்ளது. அதிலிருந்த பொருட்களை, நேற்று முன்தினம் வக்கீல் ஒருவர் எடுப்பதாக அறிந்து சென்றோம். அதற்கு அவர், 'வீட்டை நான் வாங்கியுள்ளேன். சீட்டுப்பணம் குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக்கூடாது' என்றார். புகாரளித்து இரண்டு மாதமாகியும், மோசடி செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்காததை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்டோம். இவ்வாறு கூறினர்.
'சம்பந்தப்பட்டவர்கள் மீது இன்னும் மூன்று நாட்களில் வழக்கு பதிந்து, அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர்' என்று போலீசார் உறுதியளிக்கவே, கலைந்து சென்றனர்.

