பொதுவழிப்பாதை புகாரில் போலீசார் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை
பொதுவழிப்பாதை புகாரில் போலீசார் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை
ADDED : நவ 03, 2026 06:41 AM
கிருஷ்ணகிரி; பொதுவழிப்பாதை புகாரில் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகாரளித்த நிலையில், இரு தரப்பையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி பஞ்., ஆனந்த் நகரை சேர்ந்த, 15க்கும் மேற்பட்டோர், தங்கள் பகுதியில், 20 அடி சாலை உள்ளது, முன்பகுதியில் சிறுவர் பூங்கா வருகிறது என்றதால், நிலத்தை வாங்கினோம். தற்போது அங்கு பள்ளிவாசல் கட்ட முயற்சி நடக்கிறது என தாலுகா போலீசில் புகாரளித்தனர்.இந்நிலையில் எதிர்
தரப்பிலும், 20க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தனர். அதில், பிரச்னைக்குரிய நிலம் எங்கள் பெயரில் உள்ளது. அதில் ஒரு பகுதியை வக்பு வாரியத்திற்கு வழங்கி உள்ளோம். அதற்கான ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. மேலும், அந்த இடத்தில் பள்ளிவாசல் எதுவும் கட்டவில்லை. அரபிக் பள்ளி மாணவர்கள் பயிலும் ஒரு அறை மட்டுமே கட்டப்பட்டுள்ளது. எங்கள் மீது புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து, கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இடம் குறித்து இரு தரப்பினரும் புகாரளித்துள்ள நிலையில், அப்புகார்களை வருவாய்துறைக்கு அனுப்பி உள்ளோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். தேவையின்றி எந்த வதந்திகளையும் யாரும் பரப்ப வேண்டாம் எனக்கூறி, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
