/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதையல் ஆசை கூறி ஏமாற்றிய கும்பலை பிடித்து கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு
/
புதையல் ஆசை கூறி ஏமாற்றிய கும்பலை பிடித்து கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு
புதையல் ஆசை கூறி ஏமாற்றிய கும்பலை பிடித்து கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு
புதையல் ஆசை கூறி ஏமாற்றிய கும்பலை பிடித்து கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு
ADDED : மே 05, 2025 03:53 AM
ஓசூர்: ஓசூரில், புதையல் எடுத்து தருவதாக பெண்ணை ஏமாற்றி, 8 லட்சம் ரூபாயை மோசடி செய்த கும்பல், போலீசாரிடம் வசமாக சிக்கியது. அந்த கும்பலை பிடித்து கொடுத்த பெண்ணை போலீசார், பாராட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சாந்தபுரம் செந்தமிழ் நகரில் வசிக்கும் குள்ளப்பா மனைவி ராதாம்மா, 46, என்பவருக்கு, திருப்பூர் மாவட்டம், கணியூரை சேர்ந்த சசிக்குமார், 61, உள்ளிட்ட ஒன்பது பேர் பழக்கமாகினர்.
ரூ.8 லட்சம்
அந்த ஒன்பது பேர் கும்பல், ராதாம்மாளிடம் புதையல் ஆசை கூறி ஏமாற்றலாம் என முடிவு செய்தனர். அதற்காக, அந்த பெண்ணின் வீட்டுக்கு பின்புறம் குழி தோண்டி, 2 கிலோ செம்பு காசுகளை ரகசியமாக புதைத்தனர். அதில் இரு உண்மையான தங்க காசுகளையும் வைத்து புதைத்தனர்.
பின், அந்த பெண்ணை சமீபத்தில் அணுகி, 'உங்கள் வீட்டுக்கு பின்னால் தங்க புதையல் உள்ளது. அதை எடுத்து தருகிறோம். 8 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என கூறினர். அவர்கள் கூறியதை உண்மை என நம்பிய அந்த பெண், 8 லட்சம் ரூபாயை கொடுத்தார்.
அவரின் வீட்டுக்கு சென்ற சசிக்குமார் தரப்பினர், பூஜை செய்வது போல ஏமாற்றி, ஏற்கனவே புதைத்து வைத்திருந்த, 2 கிலோ செம்பு காசுகளை தோண்டி எடுத்தனர்.
அதில் இருந்த இரு தங்க காசுகளை மட்டும் அந்த பெண்ணிடம் காண்பித்து, 'புதையல் கிடைத்து விட்டது' என்று கூறி, மொத்தமாக அந்த செம்பு காசுகளை பெண்ணிடம் கொடுத்தனர்.
அவர்கள் சென்றதும், தன்னிடம் இருந்த செம்பு காசுகளை, அந்த பெண் உரசி பார்த்தார். அவை தங்கம் இல்லை என்பது தெரிந்தது.
ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், அவர்களை வசமாக பிடிக்க முடிவு செய்தார். அதை அறியாமல், அவரின் வீட்டுக்கு மறுபடியும் நேற்று வந்த ஒன்பது பேரும், 2 லட்சம் ரூபாய் கூடுதலாக கேட்டனர்.
செம்பு காசு பறிமுதல்
அவர்களை அழைத்து வீட்டுக்கு சென்ற அந்த பெண், வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டார். கதவை திறக்க அவர்கள் சத்தம் போட்டும், அந்த பெண் திறக்கவில்லை.
அப்போது, சசிக்குமாரின் கார் டிரைவரான, கணியூரை சேர்ந்த சங்கர்கணேஷ், 43, என்பவர், நல்லுார் போலீசாருக்கு போன் செய்து, தங்களை அந்த பெண், வீட்டிற்குள் வைத்து பூட்டி வைத்துஉள்ளதாக கூறினார்.
போலீஸ் வந்து மேற்கொண்ட விசாரணையில், புதையல் எடுத்து தருவதாக கூறி, அந்த பெண்ணிடம், இந்த கும்பலை சேர்ந்தவர்கள், ஏற்கனவே, 8 லட்சம் ரூபாய் மோசடி செய்ததை அறிந்தனர்.
அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிய பெண்ணை பாராட்டிய போலீசார், சசிக்குமார், சங்கர்கணேஷ் உட்பட ஒன்பது பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட செம்பு காசுகளை பறிமுதல் செய்தனர்.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள், இதுபோல வேறு யாரையும் ஏமாற்றிஉள்ளனரா என விசாரித்து வருகின்றனர். அந்த மோசடி கும்பலை வரவழைத்ததாக கூறி, பெங்களூருவை சேர்ந்த லட்சுமிகாந்த், 53, என்பவரை, நல்லுார் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.