/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் சிக்கிய தனியார் பள்ளி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு
/
மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் சிக்கிய தனியார் பள்ளி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு
மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் சிக்கிய தனியார் பள்ளி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு
மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்தில் சிக்கிய தனியார் பள்ளி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு
ADDED : ஆக 28, 2024 07:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்ட தனியார் பள்ளி, நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவி என்.சி.சி., முகாம் பெயரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், 11 பேர் கைதான நிலையில், முக்கிய குற்றவாளி சிவராமன் கடந்த, 23ல் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரிக்க ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்ட அப்பள்ளி, மாணவர்கள், பெற்றோர் கருத்துக்களை கேட்ட நிலையில் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பல்நோக்கு குழுவினர் அறிவுறுத்தல்படி பள்ளியில், 38, 'சிசிடிவி' கேமரா, பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டது.
பள்ளியில் மொத்தம், 623 மாணவ, மாணவியரில் நேற்று, 420 பேர் பள்ளிக்கு வந்தனர். அவர்களுடன் பெற்றோரும் வந்த நிலையில், மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் சரவணன், கோபாலப்பா (தனியார் பள்ளி), வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர்களுடன் தனியார் பள்ளிகள் இணை இயக்குனர் ராமகிருஷ்ணன் தலைமையில், பள்ளியில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், மாணவர்களின் பாதுகாப்பு அம்சங்கள், தனியார் பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
அரசு பள்ளிகளை போல, தனியார் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தோற்றுவிக்கப்படும். இதில், தலைவர், செயலாளர் பொறுப்புகளுடன், மாணவர்களின் பெற்றோரும், செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். பல்நோக்கு குழு பரிந்துரை படி, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையில் ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி.,க்கள் முரளி, முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.