/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மபுரி - பெங்களூரு புதிய நெடுஞ்சாலையில் நவீன தொழில்நுட்பத்தில் ரயில்வே மேம்பாலம்
/
தர்மபுரி - பெங்களூரு புதிய நெடுஞ்சாலையில் நவீன தொழில்நுட்பத்தில் ரயில்வே மேம்பாலம்
தர்மபுரி - பெங்களூரு புதிய நெடுஞ்சாலையில் நவீன தொழில்நுட்பத்தில் ரயில்வே மேம்பாலம்
தர்மபுரி - பெங்களூரு புதிய நெடுஞ்சாலையில் நவீன தொழில்நுட்பத்தில் ரயில்வே மேம்பாலம்
ADDED : ஆக 20, 2025 03:05 AM

ஓசூர்:தர்மபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலை, ஓசூர் அருகே, ரயில்வே தண்டவாளத்தை கடப்பதால், அதன் மீது நவீன தொழில்நுட்பத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் இருந்து, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக, கர்நாடகா மாநிலம், பெங்களூரு வரை, நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.
சேலம், கோவை, ஈரோடு மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், கிருஷ்ணகிரி செல்லாமல், தர்மபுரியிலிருந்து ஓசூர் வழியாக, கர்நாடகா மாநிலம் செல்ல, இச்சாலை உதவியாக இருக்கும். இதன் மூலம், 20 கி.மீ., துாரம் வரை குறையும்.
மேலும், ஓசூர் - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். தர்மபுரி அதியமான்கோட்டையில் இருந்து, அம்மாவட்ட எல்லையான ஜிட்டாண்ட ஹள்ளி வரை, நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக முடிந்து விட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காடுசெட்டிப்பட்டியிலிருந்து, ஓசூர் வரை ஆங்காங்கே சாலை பணிகள் நடக்கும் நிலையில், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, சானமாவு வனப்பகுதியில், மந்தகதியில் நடக்கின்றன. கர்நாடகாவில் இருந்து, தமிழக எல்லையான ஓசூர் அருகே, தொரப்பள்ளி அக்ரஹாரம் வரை, 23 கி.மீ., துாரத்திற்கு சாலை பணிகள் நடக்கின்றன.
ஓசூர் அடுத்த குருபட்டி அருகே, தர்மபுரி - நெரலுார் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே தண்டவாளத்தை கடக்க வேண்டியுள்ளது. அதனால், அதன் மேல் பகுதியில் வாகனங்கள் செல்ல, மேம்பாலம் அமைக்க வேண்டியுள்ளது.
வழக்கமாக, பில்லர் போட்டு கான்கிரீட் அமைத்து தான் பாலம் அமைக்கப்படும். ஆனால், ரயில்வே தண்டவாளம் செல்வதால், கூடுதல் பில்லர் அமைக்க வாய்ப்பில்லை. அதனால், ரயில்வே தண்டவாளத்தின் இருபுறம் மட்டும், பில்லர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது இரும்பு கூண்டு போன்ற அமைப்பு அமைக்கப்பட உள்ளது.
அதற்காக தயாரிக்கப்பட்ட, இரும்பு கூண்டு தருவிக்கப்பட்டுள்ளது. அதை ரயில்வே தண்டவாளத்தின் மேல், இருபுறமும் உள்ள பில்லர்களுடன் இணையும் வகையில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பணி முடிந்தவுடன், இரும்பு கூண்டு பகுதியில், கான்கிரீட் போட்டு, அதன் மீது சாலை அமைக்கப்பட உள்ளது.
அதற்கான பணியில், ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற பாலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை.
அதிகாரிகளிடம் கேட்டபோது, 'போதுமான இடவசதி இல்லாத இடங்களில், ரயில்வே தண்டவாளங்களுக்கு மேல், இதுபோன்ற நவீன தொழில்நுட்படத்துடன் பாலம் அமைக்கப்படும்' என்றனர்.