/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒரு மழைக்கே சாலையில் தேங்கும் மழைநீர்; வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்தாத ஓசூர் மாநகராட்சி
/
ஒரு மழைக்கே சாலையில் தேங்கும் மழைநீர்; வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்தாத ஓசூர் மாநகராட்சி
ஒரு மழைக்கே சாலையில் தேங்கும் மழைநீர்; வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்தாத ஓசூர் மாநகராட்சி
ஒரு மழைக்கே சாலையில் தேங்கும் மழைநீர்; வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்தாத ஓசூர் மாநகராட்சி
ADDED : மே 23, 2024 07:11 AM
ஓசூர் : ஓசூர் மாநகராட்சி வடிகால் கட்டமைப்புகள் சரியாக இல்லாததால், ஒரு மழைக்கே மழைநீர் தேங்கி, மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 45 வார்டுகளில், 90,000 குடியிருப்புகளுக்கு மேல் உள்ளன. ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள போதும், அதற்கான சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்குகள், மழைநீர் வடிகால் போன்ற எந்த கட்டமைப்பு வசதிகளும் முறையாக இல்லை. டவுன் பஞ்., அளவில்தான் கட்டமைப்புகள் உள்ளன; மாநகராட்சிக்கு வரி கட்டிவிட்டு, போதிய கட்டமைப்புகள் இல்லாமல், மக்கள் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தேங்கும் மழைநீர்
ஓசூரில், கடந்தாண்டு போதிய மழை இல்லாததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை மழை பெய்தால் மட்டுமே, குடிநீர் பஞ்சத்தை ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்ற நிலை உருவானது. அதேபோல் தற்போது கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. ஆனால் ஓசூரில், சரியான மழைநீர் வடிகால் இல்லாததால், சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான குடியிருப்பு களுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது.
உபகரணங்கள் இல்லை
தேங்கிய நீரை அகற்ற தேவையான தண்ணீர் உறிஞ்சும் வாகனங்கள் மாநகராட்சி நிர்வாகம் வசம் இல்லை. மரங்கள் சாய்ந்து விழுந்தால், வெட்டி அகற்ற உபகரணங்கள் இல்லை. கடந்த, 2022 அக்., மாதம் ஓசூர் கே.சி.சி., நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. அதை சீரமைக்க பொக்லைன் வாகனம் மற்றும் தண்ணீர் உறிஞ்சும் வாகனங்கள் கிடைக்காமல் மாநகராட்சி தடுமாறியது. அதன் பின் கூட, மாநகராட்சி சுதாரிக்கவில்லை. மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தெரிவித்தும், பொக்லைன் மற்றும் தண்ணீர் உறிஞ்சும் வாகனங்களை, மாநகராட்சி நிர்வாகம் இதுவரை வாங்க முயற்சிக்காமல் உள்ளது.
கன மழையால் மக்கள் அவதி
ஓசூரில், நேற்று முன்தினம் மாலை, 40 மி.மீ., அளவிற்கு கனமழை கொட்டியது. அதனால், முனீஸ்வர் நகர் விரிவாக்கம், நியூ அன்னை நகர் விரிவாக்கம், சீனிவாசா கார்டன், ராம்நகர் பள்ளம் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பழைய நகராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், ராயக்கோட்டை சாலை சந்திப்பு போன்ற இடங்களில், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சரியான மழைநீர் வடிகால் இல்லாதது மற்றும் சாக்கடை கால்வாயை துார்வாராமல் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துள்ளது போன்ற காரணத்தால், ஓசூர் மாநகர பகுதிகளில், மழைநீர் சாலைகளில் தேங்கியது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் சுதாரித்து கொள்ளாமல் இருப்பதால், இன்னும் பெரிய மழை பெய்ததால், ஓசூர் நகரம் மற்றும் குடியிருப்புகள் மழைநீரில் மிதக்கும் என, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

